ஷா ஆலம், டிச 24 - டிசம்பர் 18 அன்று ரெம்பாவ், பெடாஸ், கம்போங் பத்து 4 பகுதியில் உள்ள ஒரு காலியான வீட்டில், புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணில் உடல், டிசம்பர் 8 முதல் காணாமல் போன சூரி நருடினுடையதே என காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்டவரின் அடையாளம் தேசிய பதிவு துறையில் (JPN) உள்ள விரல் ரேகையோடு ஒப்பீடு செய்து உறுதிப்படுத்தப்பட்டது என நெகிரி செம்பிலான் மாநில காவல்துறை தலைவர் டத்தோ அல்சாப்னி அக்மட் கூறினார்.
“பரிசோதனை மற்றும் ஒப்பீடு நடவடிக்கைக்காக மலேசிய குற்றவாளி பதிவு அலுவலகம், குற்றப் புலனாய்வு துறை, புகிட் அமான் காவல் தலைமையகத்திற்கு விரல் ரேகைகள் அனுப்பப்பட்டன.
“பரிசோதனை முடிவில், அந்த விரல் ரேகைகள் அம்பாங் காவல் நிலையத்தில் டிசம்பர் 15 அன்று காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்ட சூரி நருடின் என்பவரின் பதிவுகளுடன் பொருந்துவதாக உறுதி செய்யப்பட்டது,” என்று அல்சாப்னி அறிக்கை ஒன்றில் தெரிவித்ததாக ஹாரியான் மெட்ரோ செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், மலேசிய இரசாயனத் துறையிலிருந்து பெறப்பட்ட டிஎன்ஏ (DNA) பகுப்பாய்வு முடிவுகளும் அந்த உடலின் அடையாளத்தை உறுதிப்படுத்தியதாக அவர் கூறினார்.
“டிஎன்ஏ ஒப்பீடு அந்த உடல் சூரி நருடினுடையதே என்பது மேலும் உறுதியாகிறது,” என அவர் விளக்கினார்.
இதற்கு முன், அந்த பெண்ணின் உடல் பெடாஸ், பத்து 4 பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகத்திற்கிடமான நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், உடல் கண்டெடுக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் மலாக்கா மற்றும் கெந்திங் செம்பாஹ் ஆகிய இரண்டு வெவ்வேறு இடங்களில் இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்களில் ஒருவருக்கு பாதிக்கப்பட்டவருடன் அறிமுகம் இருந்ததாக நம்பப்படுவதால், அவர் இந்த வழக்கின் முக்கிய நபராக விசாரணையில் கருதப்படுகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல்கள் தெரிந்த பொதுமக்கள், ரெம்பாவ் மாவட்டக் காவல் தலைமையகம் அல்லது அருகிலுள்ள எந்த காவல் நிலையத்தையும் தொடர்புகொள்ளுமாறு அல்சாப்னி கேட்டுக்கொண்டார்.


