ஜோர்ஜ்டவுன், டிச 24 - இவ்வாண்டு கிறிஸ்துமஸ் பண்ண்டிக்கை மற்றும் ஆண்டிறுதி விடுமுறையை முன்னிட்டு பினாங்கில் 2.2 மில்லியன் வாகனங்கள் நுழையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இரண்டு நாட்கள் 50% டோல் கட்டண தள்ளுபடி வழங்கப்படுவதாலும் அங்கு வாகன நெரிசல் அதிகரிக்க வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளதாகப் பினாங்கு காவல்துறை தலைவர் அசிசி இஸ்மாயில் கூறினார்.
இதில் முக்கியமாக பினாங்கு முதல் மற்றும் இரண்டாம் பாலங்கள், ஜூரு, சுங்கை துவா, ஜோர்ஜ்டவுன் நகரப்பகுதி, ஜாலான் ஆயர் ஹீத்தாம், ஜாலான் கிரீன் லேன், மற்றும் பத்து ஃபெரிங்கி பாதைகளில் கடும் நெரிசல் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைச் சமாளிக்க 'Op Lancar' என்ற சிறப்பு சோதனை நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். இந்நடவடிக்கையில் 24 மணி நேர கண்காணிப்பு, கூடுதல் காவல்துறை பணியாளர்கள், மாநகர ரோந்துப் படைகள் பணியில் அமர்த்தப்படுவதும் அடங்கும்.
எனவே, பொது மக்கள், மழை உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டு பயணத்தை திட்டமிட்டு, பாதுகாப்பாகச் செல்லுமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது


