கோலாலம்பூர், டிச 24- புதிய தடயங்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு முன்பு நடந்ததாகக் கூறப்படும் லஞ்சக் குற்றச்சாட்டு மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பாக ஓர் முன்னாள் அமைச்சர் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) விசாரணையைத் தொடங்கியுள்ளது.
SPRM தலைமை ஆணையர் அஸாம் பாக்கி இந்த விசாரணையை உறுதிப்படுத்தியதுடன், ஊழல் தடுப்பு நிறுவனம் விசாரணைக்கு உதவுவதற்காக சம்பந்தப்பட்ட சில நபர்களை அழைக்கும் என்றும் கூறினார்.
இருப்பினும், அவர் சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சரின் பெயரை வெளியிடவில்லை. இதற்கிடையில், SPRM வட்டாரங்கள், இந்த விசாரணை கூட்டரசுப் பிரதேசத்தில் மில்லியன் கணக்கான ரிங்கிட் மதிப்புடைய திட்டங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை மையமாகக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தன.
இந்த விசாரணை விளம்பரப் பலகைகள் அமைத்தல் மற்றும் அரசுக்குச் சொந்தமான ஒரு நிலத்தை முன்னணி சொத்து மேம்பாட்டாளர் ஒருவருக்கு மாற்றுதல் ஆகியவற்றை உள்ளடக்கியது என்றும் அந்த வட்டாரங்கள் கூறின.
சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சருக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்தும், தொடர்புடைய ஆவணங்களைப் பெறுவது குறித்தும் SPRM இன்னும் விசாரித்து வருவதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.


