ஷா ஆலம், டிச 24 - சிலாங்கூர் மாநில வேளாண்மை துறையின் பெயரை பயன்படுத்தி பணம் அல்லது தனிப்பட்ட இலாபம் பெறும் நோக்கில் நடைபெறும் மோசடி நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களும் வழிகாட்டல் பெறும் தொழில்முனைவோர்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துறையின் அதிகாரியாக நடித்து செயல்படுதல் மற்றும் அரசு உள்ளூர் கொள்முதல் ஆணை (Local Order, L/O) போன்ற போலி ஆவணங்களை சமர்ப்பித்தல் ஆகியவை மோசடிக்காரர்கள் பயன்படுத்தும் செயல்முறை (modus operandi) என அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவிக்கப்பட்டது.
அரசின் கணக்குகள் மூடப்பட்டுள்ளதால் தற்போது எந்தவொரு விநியோகஸ்தருக்கும் ஒப்புதல் கடிதம் (Surat Setuju Terima) அல்லது உள்ளூர் கொள்முதல் ஆணை (L/O) வழங்கவில்லை என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“தற்போதைய நிலையில், எந்த விநியோகஸ்தருக்கும் ஒப்புதல் கடிதம் அல்லது அரசு உள்ளூர் கொள்முதல் ஆணை வழங்கப்படவில்லை என்பதை சிலாங்கூர் மாநில வேளாண்மைத் துறை வலியுறுத்துகிறது,” என்று அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அதனால், துறையின் சின்னத்தைப் பயன்படுத்தி வெளியிடப்படும் எந்தவொரு L/O ஆவணமும் போலியானதாகக் கருதப்படுவதுடன், அது மோசடி நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருக்கக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான ஆவணங்களை பெறும் எந்தவொரு நபரும் அல்லது தொழில்முனைவோரும், உடனடியாக சிலாங்கூர் மாநில வேளாண்மைத் துறை தலைமையகத்தை தொடர்புகொண்டு உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் துறை அறிவுறுத்தியுள்ளது.
“இந்தத் துறை சட்டபூர்வமான வழிகளிலும், அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் மூலமாக மட்டுமே அதிகாரப்பூர்வ ஆவணங்களை வெளியிடுகிறது,” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மோசடியால் பாதிக்கப்பட்ட நபர்கள் அல்லது நிறுவனங்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது.
மேலும், எந்தவொரு சந்தேகத்திற்கிடமான சலுகைகள் அல்லது கோரிக்கைகளாலும் எளிதில் ஏமாறாமல் பொதுமக்கள் எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் சிலாங்கூர் மாநில வேளாண்மைத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.


