கோலாலம்பூர், டிச 24- கிறிஸ்துமஸ் பெருநாள் அன்பு, தியாகம், அமைதி மற்றும் நம்பிக்கை போன்ற உலகளாவிய விழுமியங்களைப் பிரதிபலிக்கும் ஒரு முக்கியத் தருணமாகும் என மனிதவள அமைச்சர் மாண்புமிகு டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தகைய நற்பண்புகள் மலேசிய மடாணி கோட்பாட்டிற்கு ஏற்ப, ஒரு இணக்கமான மற்றும் பரஸ்பர மரியாதையுள்ள சமுதாயத்தைக் கட்டியெழுப்ப மிகவும் அவசியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
பல்வேறு இனங்கள், மதங்கள் மற்றும் கலாச்சாரங்களை கொண்ட மலேசியாவில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டமானது நாட்டின் பன்முகத்தன்மையின் அழகையும் வலிமையையும் பறைசாற்றுகிறது.

மக்களிடையே நிலவும் சகிப்புத்தன்மை, ஒற்றுமை மற்றும் ஒன்றிணைந்து செயல்படும் பண்பே நாட்டின் சமூக ஸ்திரத்தன்மைக்கு செழிப்புக்கும் அடிப்படை என்று சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அனைத்து மதத்தினரையும் மதித்து ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், கிறிஸ்தவ மதத்திலும் பிற மதங்களிலும் போதிக்கப்படும் மற்றவர்களுக்கு உதவுதல் மற்றும் பரஸ்பர புரிதல் போன்ற விழுமியங்களை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
ஒற்றுமை அரசாங்கத்தின் தொலை நோக்குத் திட்டங்களைச் செயல்படுத்த இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இறுதியாக, இந்த கிறிஸ்துமஸ் பெருநாள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் அமைதியையும் வழங்க வாழ்த்திய டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், பிறக்கவிருக்கும் புத்தாண்டு மலேசியர்களுக்கு புதிய வாய்ப்புகளையும் முன்னேற்றத்தையும் கொண்டு வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


