கோலாலம்பூர், டிச 24 - நாட்டின் ஒவ்வொரு முதலீடும் மக்களுக்கு இன்று மட்டுமல்ல, எதிர்காலத்திற்கும் அர்த்தமுள்ள பலனை வழங்க வேண்டும் என்பதே மடாணி அரசின் உறுதிமொழி என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
மடாணி அரசு கொண்டு வரும் முதலீடுகள் பொருளாதார வளர்ச்சியை மட்டும் ஊக்குவிப்பதல்ல; அவை மக்களுக்கு நேரடியாகக் கிடைக்கும் நன்மைகளாகவும் மாற்றப்படுவதாக நிதியமைச்சராகவும் இருக்கும் அன்வார் கூறினார்.
“இவை தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன, வருமானத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துகின்றன, மேலும் அதிக போட்டித்திறன் கொண்ட புதிய பொருளாதார சக்தியை உருவாக்குகின்றன,” என்று அவர் நேற்று இரவு தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.
2025ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களுக்கான நாட்டின் முதலீட்டு செயல்திறனை காட்டும் சில தகவல்-வரைபடங்களையும் பிரதமர் பகிர்ந்தார்.
அதன்படி, 2025 ஜனவரி முதல் செப்டம்பர் வரை RM285.2 பில்லியன் மதிப்பிலான அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகளை மலேசியா பதிவு செய்துள்ளது. இது 13.2 சதவீத உயர்வாகவும், கோவிட் முன் காலகட்டமான 2006–2020 ஆண்டுகளின் அனைத்து சாதனைகளையும் மிஞ்சியதாகவும் உள்ளது.
மேலும், “உலகளாவிய நம்பிக்கை: மாபெரும் நிறுவனங்கள் மலேசியாவைத் தேர்வு செய்கின்றன” என்ற துணைத் தலைப்பின் கீழ், அதே காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏழு முதலீடுகள் RM24.5 பில்லியன் மதிப்பிலான முதலீடுகளை உருவாக்கியதாக தகவல்கள் காட்டுகின்றன.
அதேபோல், உயர்மதிப்பு துறைகள் எதிர்காலத்தை இயக்குவதில் முக்கிய பங்கு வகித்து, மொத்த முதலீட்டில் RM137.9 பில்லியன் அல்லது 48.4 சதவீதத்தை பங்களித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
— பெர்னாமா


