புத்ராஜெயா, டிச 23- மூத்த இராணுவ அதிகாரி ஒருவரின் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகளில் பெரிய அளவிலான பணம் வைப்புச் செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்பிஆர்எம்) விசாரணை நடத்தி வருகிறது.
எஸ்பிஆர்எம் வட்டாரங்கள் தெரிவித்தபடி, 2023ஆம் ஆண்டு முதல் இராணுவம் சம்பந்தப்பட்ட பல திட்டங்கள் குறித்து ஆரம்பக்கட்ட விசாரணையைத் தொடங்க, அதிகாரிகள் இன்று காலை தற்காப்பு அமைச்சுக்குச் சென்றனர்.
"திறந்த ஒப்பந்தப்புள்ளி மூலம் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் இராணுவத்தின் பொறுப்பு மையங்களின் கீழ் உள்ள கொள்முதல் நடவடிக்கைகளில் இந்த விசாரணை கவனம் செலுத்துகிறது," என்று அந்த வட்டாரம் குறிப்பிட்டது.
சந்தேகத்திற்கிடமான இந்த பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய மற்றவர்களையும் எஸ்பிஆர்எம் விசாரிக்கும் என்று அந்த வட்டாரம் மேலும் தெரிவித்தது.
ஓர் அறிக்கையில், எஸ்பிஆர்எம் தலைவர் அஸாம் பாக்கி, முகவர்களால் சன்மானம் வழங்குதல் அல்லது பெறுதல் தொடர்பான மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம், பிரிவு 17(a)-இன் கீழ் இந்தக் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு வருவதை உறுதிப்படுத்தினார்.
மூத்த இராணுவ அதிகாரி ஒருவரின் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகளில் "பெரிய அளவிலான பணப் புழக்கம்" குறித்து விசாரணை நடத்தக் கோரி, ஒரு சமூக ஆர்வலர் டங் வாங்கி காவல்துறை தலைமையகத்தில் காவல்துறை புகார் அளித்திருந்தார்.
அவர் பெற்ற ஆவணங்களின் தணிக்கையில் மாதந்தோறும் RM50,000 முதல் RM60,000 வரை வைப்புத் தொகைகள் இருந்ததாக அவர் குற்றம் சாட்டினார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க எஸ்பிஆர்எம் தயாராக இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட தகவல்கள் உள்ளவர்கள் துணை ஆவணங்களுடன் அதிகாரப்பூர்வ புகார் அளிக்க வேண்டும் என்றும் அஸாம் பின்னர் தெரிவித்தார்.



