நாடு முழுவதும் 635 தானியங்கி குடிநுழைவு கதவுகள் (Autogate) அமைக்கப்படும்

23 டிசம்பர் 2025, 9:24 AM
நாடு முழுவதும் 635 தானியங்கி குடிநுழைவு கதவுகள் (Autogate) அமைக்கப்படும்

பெட்டாலிங் ஜெயா, டிச 23 - எதிர்வரும் 2028ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் 125 நுழைவு மையங்களில் மொத்தம் 635 தானியங்கி குடிநுழைவு கதவுகள் (Autogate) அமைக்கப்படும் என்று குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ சாகரியா சாபான் தெரிவித்துள்ளார்.

நாட்டிற்குள் நுழையும் பகுதிகளில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை அமல்படுத்தப்படும். இது விமானம், நிலம் மற்றும் கடல் ஆகிய வழிகளை உள்ளடக்கியது

இந்த திட்டம் கோலாலம்பூர் அனைத்துலக நிலையமான கே.எல்.ஐ.ஏ. மற்றும் ஜோகூர் CIQ வளாகங்கள் உள்ளிட்ட முக்கிய நுழைவுப் பகுதிகளிலும் அமல்படுத்தப்படவுள்ளது. தற்போது நாட்டில் 75 தானியங்கி குடிநுழைவு கதவுகள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன.

இந்த நிறுவல் பணிகள் அடுத்தாண்டில் கட்டம் கட்டமாக தொடங்கப்படவுள்ளன. இதற்கு ஏற்ற வகையில், QR குறியீடு அடிப்படையிலான விரைவு சோதனை முறையும் நடைமுறையில் உள்ளது. ஜோகூர் CIQ-வில் மட்டுமே அமல்படுத்தப்பட்டு வந்த இந்த முறை விரைவில் கே.எல்.ஐ.ஏ. உள்ளிட்ட இதர முக்கிய விமான நிலையங்களிலும் விரிவுபடுத்தப்படும்.

இத்திட்டத்தில், செயற்கை நுண்ணறிவு, முகம், கைரேகை அடையாளம், e-பாஸ்போர்ட் சிப் சரிபார்ப்பு, போலி ஆவணங்களைக் கண்டறிதல் மற்றும் நேரடி கண்காணிப்பு பட்டியல் சோதனை போன்ற உயர் பாதுகாப்பு அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியப் பயணிகள், 63 குறைந்த அபாய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள், தகுதியான நீண்டகால அனுமதி பெற்றவர்கள், தூதரக பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் இந்த தானியங்கி குடிநுழைவு கதவுகளின் வசதியைப் பயன்படுத்தலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.