கோலாலம்பூர், டிச 23: உலகம் முழுவதும் பல விமான நிறுவனங்கள் பயன்படுத்தும் உலகளாவிய பயணிகள் செயலாக்க அமைப்பில் ஏற்பட்ட தற்காலிக இடையூறு, மலேசிய விமான நிலையங்களில் செக்-இன் மற்றும் போர்டிங் செயல்முறைகளை பாதித்துள்ளதாக மலேசிய விமான நிலைய நிறுவனம் (MAHB) இன்று தெரிவித்துள்ளது.
இந்த சிக்கல் பயணிகள் செயலாக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இதனால் விமான நிறுவனங்கள் தங்கள் விமான நிலையங்களில் மாற்று நடைமுறைகளை (contingency procedures) செயல்படுத்தலாம் என்று MAHB அறிவித்தது.
"அனைத்து விமான நிலையங்களிலும் நிலவரத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். பயணிகளின் பாதுகாப்பும் வசதியும் எங்களின் முதன்மை முன்னுரிமையாகும்," என்றும் MAHB குறிப்பிட்டது.
பயணிகள் தங்களுடைய போர்டிங் பாஸ் மற்றும் பைக்கேஜ் டேக் லேபிள்களை அச்சிட, சுய சேவை கியோஸ்க்குகள் (self-service kiosks) முழுமையாக செயல்பாட்டில் உள்ளன என விமான நிலைய இயக்குனர்கள் தெரிவித்தனர்.
"பயணிகள், விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையக் குழுக்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றவும், சமீபத்திய விமான அட்டவணைகளை விமான நிறுவனங்களுடன் நேரடியாகச் சரிபார்க்கவும், இணையம் மூலம் செக்-இன் செய்யவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்," என்று தெரிவிக்கப்பட்டது.


