ஷா ஆலம், டிச 23: தாமான் பாகோ ஜெயாவில் உள்ள தனது வீட்டில் ஏற்பட்ட சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவத்தில் கடுமையாகக் காயமடைந்த துப்புரவுத் தொழிலாளி ஃபௌசிஷாம் தார்விஸ் (51) திங்கட்கிழமை மதியம் 12.15 மணியளவில் உயிரிழந்தார்.
கடந்த வியாழக்கிழமை இரவு முதல் சுல்தானா ஃபாத்திமா சிறப்பு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) ஃபௌசிஷாம் டார்விஸ் சிகிச்சை பெற்று வந்தார். அவரது இறப்பு செய்தியை நெருங்கிய நண்பர் ஹனபி தாயிப் (51) உறுதிப்படுத்தினார்.
அவரின் உடல் கம்போங் தெருஸ் பஞ்சோர் இஸ்லாமிய கல்லறையில் அடக்கம் செய்யப்படும் என சினார் ஹாரியான் தெரிவித்துள்ளது.
இந்த மரணம் தொடர்பான புகாரைக் காவல்துறை பெற்றுள்ளதாகவும், திடீர் மரணம் நடைமுறையின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மூவார் மாவட்டக் காவல் துறை தலைவர், உதவி ஆணையர் ரைஸ் முக்லிஸ் அஸ்மான் அசீஸ் உறுதிப்படுத்தினார்.
வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில், ஃபௌசிஷாம் கடுமையாக காயமடைந்தார். அந்த நேரத்தில் அவர் வீட்டில் தனியாக இருந்த நிலையில், அவரது மனைவி பொருட்களை வாங்க வெளியே சென்றிருந்தார்.
பின்னர், ஃபௌசிஷாம் முகம் மற்றும் உடல் பகுதிகளில் காயங்களுடன் அவரது வீட்டின் வெளியே தரையில் காணப்பட்டார் என தெரிவிக்கப்பட்டது.


