கோலாலம்பூர், டிச 23 - 2026ஆம் ஆண்டுக்கான பள்ளி தொடக்க உதவித் திட்டம் (பிஏபி), அடுத்த ஆண்டு ஜனவரி மாதத் தொடக்கத்தில் 5.2 மில்லியனுக்கும் அதிகமான பள்ளி மாணவர்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் RM150 தொகையின் மூலம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.கல்வி அமைச்சு (கேபிஎம்) இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், பெற்றோரின் வருமான வரம்பைப் பொருட்படுத்தாமல், பள்ளி உபகரணங்களுக்கான செலவுகளைக் குறைக்கும் நோக்கில், ஆண்டு 1 முதல் படிவம் 6 வரையிலான மாணவர்களுக்கு இந்த உதவி வழங்கப்படும் என்று தெரிவித்தது.இந்த உதவி விநியோகம் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கிடையிலான சந்திப்பு நிகழ்ச்சிகள் மூலம் பணமாக வழங்கப்படும் என்று கேபிஎம் குறிப்பிட்டது."இந்த அணுகுமுறை மிகவும் பயனுள்ள விநியோகத்தை உறுதி செய்வதுடன், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கம் கொண்டது."இந்த தொடர்ச்சியான அர்ப்பணிப்பு, தரமான கல்வியை தொடர்வதற்கு மாணவர்களின் நலன் எப்போதும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதில் அரசாங்கத்தின் அக்கறையைப் பிரதிபலிக்கிறது," என்று அந்த அறிக்கை கூறியது.கடந்த அக்டோபர் 10ஆம் தேதி 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட சமர்ப்பிப்பின் போது, பிள்ளைகளின் பள்ளி சூழலை மேலும் சிறப்பாகத் தயார்படுத்த பெற்றோர்களுக்கு உதவும் வகையில் இந்த உதவி அறிவிக்கப்பட்டதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டிருந்தார்.
2026ஆம் ஆண்டுக்கான பள்ளி தொடக்க உதவித் திட்டம்: 5.2 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களுக்கு RM150 வழங்கப்படும்
23 டிசம்பர் 2025, 8:00 AM



