ஷா ஆலம், டிச 23 - கடந்த 2020 ஜூன் மாதத்திலிருந்து இதுவரை 8,583 உணவுப் பெட்டிகளை சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் உள்ள B40 குடும்பங்களுக்குப் பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் வழங்கியுள்ளது என்று அதன் தகவல் தொடர்பு தலைவர் எலினா பசேரி தெரிவித்தார்.
“பாக்ஸ் ஆஃப் ஹோப்” (Boxes of Hope) என அழைக்கப்படும் இந்த உணவுப் பெட்டிகள், குறைந்த வருமானக் கொண்ட குழுக்களின் சுமையை குறைப்பதற்காக வழங்கப்படுகின்றன என்று அவர் கூறினார்.
“இந்த அடிப்படை உணவுப் பொருட்கள் விநியோகம், உள்ளூர் சமூகங்கள், குடியிருப்பாளர் சங்கங்கள், ஊராட்சி மன்றங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் (NGO) உள்ளிட்ட சமூகத்தின் பல்வேறு பிரிவுகளை மேலும் நெருக்கமாக இணைக்கிறது.
“கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, ஆயர் சிலாங்கூர், ஶ்ரீ கெம்பாங்கனில் உள்ள ``BRDB Rotary Children’s Residence``, பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ``Shelter Home for Children`` மற்றும் காஜாங்கில் உள்ள ``Pusat Jagaan Kanak-kanak Openhands Fellowship`` ஆகிய அமைப்புகளுக்கு உணவு, உடை மற்றும் சுத்தம் செய்யும் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்கியது.
“இந்த பண்டிகைக் காலத்தை கொண்டாடுவதில் யாரும் புறக்கணிக்கப்படாமல் இருக்க, தேவையுள்ள சமூகங்களை அணுகும் தனது உறுதிப்பாட்டை ஆயர் சிலாங்கூர் தொடர்ந்து பேணும்,” என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும், பொதுமக்கள் ஆயர் சிலாங்கூரின் ``Box of Hope`` இணையப் பக்கத்தின் மூலம் டிஜிட்டல் முறையில் பங்களிப்பு வழங்கலாம் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆயர் சிலாங்கூர் என்பது மலேசியாவின் மிகப் பெரிய நீர் சேவை வழங்குநராகும். இது சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ரஜெயாவில் உள்ள 9.62 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனாளர்களுக்கு சுத்தமான மற்றும் பாதுகாப்பான சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


