புத்ராஜெயா, டிச 23- நாட்டின் நீதித்துறையை நடப்பு மடாணி அரசாங்கம் மதிப்பதுடன் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கை உட்படுத்திய கூடுதல் உத்தரவு தொடர்பான வழக்கு விசாரணையின் முடிவானது அனைத்து தரப்பும் மதிக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
நீதித்துறையானது என்றென்றும் சுயேட்சையாக செயல்பட வேண்டிய கடப்பாடு கொண்டுள்ளது. இதில் யாருடைய தாக்குதலும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
நீதித்துறையின் கொள்கையின் அடிப்படையில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தாம் மதிப்பதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஓர் அறிக்கையின் வாயிலாக குறிப்பிட்டார்.
முன்னதாக, தனது எஞ்சிய சிறை தண்டனையை வீட்டில் இருந்து கழிக்க வகை செய்யும் கூடுதல் உத்தரவு தொடர்பாக முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் மேற்கொண்ட நீதிமன்ற மறுசீராய்வு விண்ணப்பத்தை இங்குள்ள கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
இதனால் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் தனது சிறை தண்டனையைத் தொடர்ந்து காஜாங் சிறையில் கழிப்பார் என்று நீதிபதி அலைஸ் லோக் தீர்ப்பளித்தார்.
இருப்பினும், கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் மேல்முறையீடு மேற்கொள்வார் என்று அவர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் டான்ஶ்ரீ ஷஃபி அப்துல்லா செய்தியாளர்கள் முன்னிலையில் குறிப்பிட்டிருந்தார்.


