கோலாலம்பூர், டிச 22- ஹரிமாவ் மலாயாவின் ஏழு பாரம்பரிய வீரர்கள் சம்பந்தப்பட்ட ஆவண மோசடி விவகாரம் குறித்து மலேசிய காற்பந்து சங்கம் (எஃப்ஏஎம்) விரைவில் காவல்துறை புகார் அளிக்கும்.
எஃப்ஏஎம்-இன் தற்காலிகத் தலைவர் டத்தோ முகமட் யூசோஃப் மஹாடி கூறுகையில், இந்த நடவடிக்கை சுதந்திர விசாரணைக்குழு (ஐஐசி) அதன் முழு விசாரணை அறிக்கையில் முன்வைத்த பரிந்துரைக்கு இணங்க எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்துலக காற்பந்து சம்மேளனத்திற்கு (ஃபிஃபா) அனுப்பப்பட்ட போலி ஆவணங்களுக்குப் பொறுப்பான நபர்களை அடையாளம் காண காவல்துறை புகார் அவசியம் என்று அவர் கூறினார்.
"இந்த ஆவண மோசடி எப்படி நடந்தது, இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பதைக் கண்டறிவது உட்பட முழுமையான விசாரணையை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் நாங்கள் விரைவில் காவல்துறை புகார் அளிப்போம்," என்று கிளானா ஜெயாவிலுள்ள எஃப்ஏஎம் விஸ்மாவில் இன்று நடைபெற்ற செயற்குழு சிறப்புக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, முன்னாள் தலைமை நீதிபதி துன் எம்.டி. ராவூஸ் ஷாரிஃப் தலைமையிலான ஐஐசி, இந்த வழக்கில் பொறுப்பான தரப்பினரை உறுதியாக அடையாளம் காணத் தவறியதால், எஃப்ஏஎம் உடனடியாக காவல்துறை புகார் அளிக்குமாறு பரிந்துரைத்தது.
அறிக்கையில் சுருக்கப்பட்டுள்ள விரிவான விசாரணையில், பொது நோட்டரிகள் ஒத்துழைக்கத் தவறியது மற்றும் சம்பந்தப்பட்ட வீரர்களின் முகவர்களைக் கண்டறிவதில் உள்ள சிரமங்கள் உட்பட சில முக்கிய தடைகள் கண்டறியப்பட்டுள்ளன.
இதேவேளையில், பணி இடைநீக்கம் செய்யப்பட்ட எஃப்ஏஎம் பொதுச் செயலாளர் டத்தோ நூர் அஸ்மான் ரஹ்மான், அவரது நிலை அதிகாரப்பூர்வமாகத் தீர்மானிக்கப்படுவதற்கு முன்பு எஃப்ஏஎம் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிடம் பரிந்துரைக்கப்படுவார்.
ஒழுங்கு நடவடிக்கை செயல்முறை சுதந்திரமாகவும், எஃப்ஏஎம் சட்டங்கள் மற்றும் விதிகளின்படி மேற்கொள்ளப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


