ஜகர்த்தா, டிச 22- இந்தோனேசியாவில் நெடுஞ்சாலைத் தடுப்பை மோதிய விரைவுப் பேருந்து கவிழ்ந்ததில் குறைந்தது 16 பேர் உயிரிழப்பு
இந்தோனேசியாவில் திங்கட்கிழமை நெடுஞ்சாலைத் தடுப்பை மோதிய விரைவுப் பேருந்து கவிழ்ந்ததில் குறைந்தது 16 பேர் உயிரிழந்தனர்.
ஓர் அறிக்கையில், உள்ளூர் தேடல் மற்றும் மீட்புப் பிரிவின் தலைவர் புடியோனோ, சம்பவ இடத்திலிருந்து 34 பேரைத் தங்கள் தரப்பினர் அப்புறப்படுத்தியதாகத் தெரிவித்தார்.
"அந்தப் பேருந்து தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து யோக்ஜாகர்த்தாவிற்குச் சென்று கொண்டிருந்தது. ஒரு நெடுஞ்சாலைச் சந்திப்பின் வளைவில் திரும்பியபோது, சற்று அதிக வேகத்தில் சென்றதாக நம்பப்படுகிறது," என்று புடியோனோ கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது, 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது, மேலும் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
மேலும் சில பாதிக்கப்பட்டவர்கள் மேலதிக சிகிச்சைக்காக செமராங் நகருக்கு அனுப்பப்பட்டனர்.
இந்தோனேசியாவில் பழுதடைந்த வாகனங்களின் பயன்பாடு, மட்டுப்படுத்தப்பட்ட பராமரிப்பு மற்றும் சாலை விதிகளைப் பரவலாகப் புறக்கணித்தல் காரணமாக போக்குவரத்து விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன.
2024ஆம் ஆண்டில், ஈகைப்பெருநாள் காலத்தில் நெரிசலான நெடுஞ்சாலைகளில் கார் மற்றும் பேருந்துகள் சம்பந்தப்பட்ட விபத்துகளில் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர்.
இதற்கிடையில், 2019ஆம் ஆண்டில், நாட்டின் மேற்குப் பகுதியான சுமத்ரா தீவில் ஒரு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தபோது குறைந்தது 35 பேர் உயிரிழந்தனர்.


