ஈப்போ, டிசம்பர் 22- கம்பார், கம்போங் மஸ்ஜிட் பகுதியில், இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், 54 ஆண்டுகள் பழமை வாய்ந்த கடைவீதி முற்றிலும் எரிந்தது.
இத்தீ விபத்து குறித்து இன்று அதிகாலை 3.10 மணியளவில் தகவல் கிடைத்ததாக பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவின் உதவி இயக்குநர் ஷாஸ்லின் முகமட் ஹனாஃபியா தெரிவித்துள்ளார். இதனையடுத்து, கம்பார், கோப்பேங் மற்றும் தாப்பா தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவைச் சேர்ந்த 25 வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், இச்சம்பவத்தில் யாருக்கும் காயமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார். மேலும் காலை 7.46 மணியளவில் தீ முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டு அணைக்கப்பட்டது என ஷாஸ்லீன் தெரிவித்தார்.


