ஷா ஆலம், டிசம்பர் 22- நேற்று பெக்கான்,கம்போங் பெர்மாத்தாங் தெபுங் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 12 வயது சிறுவன் நெல் வயல் கால்வாயில் மூழ்கி உயிரிழந்தான்.
உயிரிழந்த சிறுவன் ஆறாம் வகுப்பு மாணவனான முகமட் அலிஃப் ஃபஹ்மி அப்துல்லா என அடையாளம் காணப்பட்டதாகக் பெக்கான் மாவட்ட காவல்துறைத் தலைவர் கண்காணிப்பாளர் முகமட் சய்தி மாட் சின் கூறினார். சிறுவன் தனது ஒன்பது வயது இளைய சகோதரனுடனும் இரண்டு நண்பர்களுடனும் பெற்றோரின் அனுமதியின்றி கால்வாய்க்குச் சென்றான் என்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
கால்வாயில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, சிறுவன் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதுடன் உடனே நண்பர்கள் கிராம மக்களிடம் உதவி கோர, தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சம்பவ இடத்திலிருந்து சுமார் 20 மீட்டர் தொலைவில், சுமார் இரண்டு மீட்டர் ஆழத்தில் சிறுவன் மயக்கமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
பிறகு நெனாசி சுகாதார கிளினிக்கின் மருத்துவ அதிகாரி பரிசோதனை செய்து, சிறுவன் உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்தினர். பெக்கான் மாவட்ட மருத்துவமனை தடயவியல் பிரிவின் பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி, சிறுவனின் மரணத்திற்கான காரணம் நீரில் மூழ்கியதுதான் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


