ஷா ஆலம், டிசம்பர் 22: மலாக்காவில் நேற்று நடைபெற்ற “Budaya Duyong 2025” சர்வதேச ஓட்டப் போட்டியின் போது, மின்சார கேபிளில் மோதி நெல் வயலில் விழுந்த பாராமோட்டர் ஓட்டுநர் காயமடைந்தார்.
காலை 8.40 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், சிலாங்கூர் மாநில பாராமோட்டர் அணியயைச் சேர்ந்த ஆடவர் இயக்கிய பாராமோட்டார், புக்கிட் பாருவின் கம்போங் கு சாயாங்கில் உள்ள நெல் வயலில் தொழில்நுட்பக் கோளாறுகளை சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
பாராமோட்டர் சுமார் 30 மீட்டர் உயரத்தில் இருந்து கேபிளில் மோதி நெல் வயலில் விழுந்தது என்று மத்திய மலாக்கா மாவட்ட காவல்துறைத் தலைமை உதவி ஆணையர் கிறிஸ்டோபர் படிட் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். மேலும் சம்பவ இடத்துக்கு தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) ஊழியர்கள் மோதிய மின் கேபிளை ஆய்வு செய்ததில் எந்த சேதமும் கண்டறியப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.


