லாகூர், டிசம்பர் 20 — பாகிஸ்தான் நீதிமன்றம் சனிக்கிழமை முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி ஆகியோருக்கு ஆடம்பர அரசு பரிசுப் பொருள்களை குறைந்த விலையில் வாங்கிய ஊழல் வழக்கில் தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது என்று நீதிமன்றமும் கானின் வழக்கறிஞர்களும் தெரிவித்தனர்.
இந்த சமீபத்திய தண்டனை, 2023 ஆகஸ்ட் முதல் சிறையில் இருக்கும் கானின் தொடர்ச்சியான சட்ட சிக்கல்களுக்கு மேலும் ஒன்றை சேர்க்கிறது. தற்போது அவர் வேறொரு நில ஊழல் வழக்கில் 14 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து வருகிறார்.
2022-ல் பதவியில் இருந்து அகற்றப்பட்ட பிறகு ஊழல் முதல் பயங்கரவாதம் மற்றும் அரச ரகசியங்கள் குற்றச்சாட்டுகள் வரை பல வழக்குகள் அவர் மீது தொடரப்பட்டுள்ளன. அனைத்து வழக்குகளிலும் குற்றமற்றவர் என்று கான் மறுத்துள்ளார். இவை அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று அவரது கட்சி கூறுகிறது.
"நீதிமன்றம் பாதுகாப்பு தரப்பு வாதத்தை கேட்காமலேயே தீர்ப்பை அறிவித்து, இம்ரான் கான் மற்றும் புஷ்ரா பிபிக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் கனத்த அபராதமும் விதித்தது" என்று கானின் குடும்ப வழக்கறிஞர் ராணா முடாசர் உமர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
பாகிஸ்தான் தண்டனைச் சட்டத்தின் கீழ் நம்பிக்கை மோசடிக்காக 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும் ஊழல் தடுப்பு சட்டங்களின் கீழ் மேலும் 7 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது என்று பாகிஸ்தான் கூட்டாட்சி விசாரணை அமைப்பின் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்தது.
சனிக்கிழமை தீர்ப்பின் சிறைத்தண்டனை, நில ஊழல் வழக்கின் 14 ஆண்டுகளை முடித்த பிறகே தொடங்கும் என்று தகவல் அமைச்சர் அத்தாவுல்லா தரார் கூறினார்.
இந்த வழக்கு, அதிகாரப்பூர்வ பயணங்களின் போது சவுதி அரேபியாவின் இளவரசர் மொஹம்மத் பின் சல்மான், இம்ரான்கானுக்கு அளித்த ஆடம்பர கடிகாரங்கள் தொடர்பானது. இவற்றை கான் மற்றும் அவரது மனைவி பாகிஸ்தான் பரிசு விதிகளை மீறி அரசிடம் இருந்து கணிசமாக குறைந்த விலையில் வாங்கியதாக வழக்குத் தொடர்பாளர்கள் கூறினர்.
இந்த வாங்குதல் அரசுக்கு பல மில்லியன் ரூபாய் இழப்பை ஏற்படுத்தியது என்று தரார் கூறினார்.
கானின் செய்தித் தொடர்பாளர் ஜுல்ஃபி புகாரி, இந்த தீர்ப்பு நீதியின் அடிப்படைகொள்கைகளை புறக்கணிப்பதாகவும், செயல்முறையை தேர்ந் தெடுக்கப்பட்ட வழக்குத் தொடரலுக்கான கருவியாக மாற்றுவதாகவும் கூறினார்.
இந்த தீர்ப்பை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற-த்தில் மேல்முறையீடு செய்யுமாறு கான் தனது சட்டக் குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளார்


