புத்ராஜெயா, டிச 20 - ஹலால் சான்றிதழ் பெற்ற வணிக வளாகங்களில் முஸ்லீம் அல்லாத பண்டிகை அலங்காரங்களுக்கு எந்தத் தடையும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
ஆனால், அது ஹலால் கொள்கையைப் பாதிக்காமல் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்று மத விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் சுல்கிப்ளி ஹசான் தெரிவித்தார்.
ஹலால் சான்றிதழ் வைத்திருப்பவர்கள் இஸ்லாம் அல்லாத பிற மதப் பண்டிகைகள் தொடர்பான படங்கள், விளக்கப்படங்கள் அல்லது அலங்காரங்களைப் பயன்படுத்துவதற்கு எவ்வித தடையும் இல்லை. இந்நடவடிக்கை 2023ஆம் ஆண்டு JAKIM எடுத்த முடிவுக்கு இணங்க அமல்படுத்தப்படுகிறது.
மேலும், மலேசிய ஹலால் சான்றிதழைக் கொண்ட சமையலறை அல்லது தங்கும் விடுதி வளாகங்களில் இஸ்லாம் அல்லாத பண்டிகைகளுக்கான அலங்காரங்களுக்கும் இந்த முடிவு பொருந்தும் என்றார் அவர்.
மலேசியாவின் பன்முகத்தன்மையையும் சமூக ஒற்றுமையையும் புறக்கணிக்காமல் தற்போதுள்ள ஹலால் தரநிலைகளைத் தொடர்ந்து பின்பற்ற டாக்டர் சுல்கிப்ளி கேட்டு கொண்டார்.


