பெட்டாலிங் ஜெயா, டிச 20 - தாமான் மேடான் தொகுதியில் உள்ள 200 மாணவர்களுக்கு புதிய கல்வியாண்டை முன்னிட்டு ``மீண்டும் பள்ளிக்கு செல்வோம்`` திட்டத்தின் கீழ் RM100 மதிப்புள்ள பற்றுச்சீட்டு மற்றும் பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்த உதவி மாத வருமானம் RM3,000 மற்றும் அதற்கு குறைவாக உள்ள குடும்பங்களை இலக்காகக் கொண்டு வழங்கப்பட்டது என தாமான் மேடான் தொகுதியின் ஒருங்கிணைப்பாளர் ஹலிமெய் அபு பக்கர் தெரிவித்தார்.
“மாணவர்களின் பெற்றோர் தாமான் மேடான் தொகுதியின் வாக்காளர்களாக இருக்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு தலா RM100 மதிப்புள்ள பற்றுச்சீட்டை பெற தகுதி உண்டு,” என்றார் அவர்.
“இந்த பற்றுச்சீட்டுகளைக் கொண்டு காலணி, கால்சட்டை, சட்டை மற்றும் காலுறைகள் உள்ளிட்ட பள்ளி உபகரணப் பொருள்களை வாங்கி கொள்ளலாம்.
இந்த பொருட்களை வழங்கும் நிகழ்ச்சியின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ சீயான் சுங் அவர்களும் கலந்து கொண்டார்.
இந்தத் திட்டத்திற்கான நிதி, மாநில அரசின் ஆதரவுடன் தாமான் மேடான் தொகுதி ஒருங்கிணைப்பின் மூலம் வழங்கப்பட்டதாக ஹலிமெய் தெரிவித்தார்.
“இந்த பற்றுச்சீட்டுகளைப் பெறுநர்கள் சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும். இந்தச் சிறிய உதவி அவர்களுக்கு பயனுள்ளதாக அமையட்டும்.
மேலும், இந்தக் குழந்தைகள் வாழ்க்கையிலும் கல்வியிலும் தொடர்ந்து முன்னேறி வெற்றி பெற வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன்,” என அவர் கூறினார்.


