கோலாலம்பூர், டிச 20 – எதிர்வரும் ஜனவரியிலிருந்து, சமூக பாதுகாப்பு நிறுவனத்தின் (Perkeso) கீழ் மேற்கொள்ளப்படும் அனைத்து விண்ணப்பங்களும் இணையம் வழி சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
இதில் 1969 தொழிலாளர் சமூகப் பாதுகாப்புச் சட்டம், 2017 சுயதொழில் சமூகப் பாதுகாப்புச் சட்டம், 2017 வேலைவாய்ப்பு காப்பீட்டு முறை சட்டம் மற்றும் 2022 இல்லத்தரசிகள் சமூகப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவை அடங்கும்.
இந்த நடவடிக்கை மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ ஆர். ரமணன் வெளியிட்ட நான்கு முக்கிய அறிவிப்புகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
“வருடத்திற்கு சராசரியாக சமூக பாதுகாப்பு நிறுவனம் 2,00,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை பெறுகின்றன. அவற்றை புதிய முறையின் மூலம் எளிமைப்படுத்தலாம். இதனால், பங்களிப்பாளர்கள் அலுவலகங்களுக்கு நேரடியாக செல்லும் தேவையும் குறையும்,” என்று அவர் தெரிவித்தார்.
இந்நடவடிக்கை நாடு முழுவதும் சந்தா பங்களிப்பாளர்கள் மற்றும் பயனர்களுக்கு வழங்கப்படும் சேவையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கொள்கை சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாகும் என்றார் அவர்.


