ஷா ஆலம், டிச 20 - பந்திங் மருத்துவமனையில் கூடுதல் கட்டடத் தொகுதிகள் அமைக்கப்படுவதன் மூலம், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகளுக்கு வசதியின் தரம் உயர்த்துவதோடு, அங்கு நிலவும் கூட்ட நெரிசல் பிரச்சனையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் அந்த மருத்துவமனையில் புதிய கட்டடத் தொகுதி கட்டப்படுவது, கோல லங்காட் மக்களின் நீண்டக்கால எதிர்பார்ப்பாகும் என வீடமைப்பு துறையின் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ போர்ஹான் அமான் ஷா தெரிவித்தார்,
ஏனெனில், பந்திங் மருத்துவமனை, உள்ளூர் மக்களின் முக்கிய மருத்துவ சேவை மையமாக இருந்து வருவதோடு, இடவசதி குறைவு மற்றும் அதிக நெரிசல் ஆகிய சிக்கல்களையும் எதிர்கொண்டு வருகிறது.
“அமைச்சரவை மற்றும் பிரதமரின் ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், இந்த கட்டுமானம் கோல லங்காட் மக்களுக்குப் பெரும் நிவாரணமாக அமையும்.
“ஆண், பெண் மற்றும் குழந்தைகள் வார்டுகளுக்கு சென்று நேரில் பார்த்தாகவும்
அங்கு கூடுதலாக 89 படுக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளதால் நோயாளிகள் வசதியற்ற நிலையில் இருப்பதை கண்டேன்,” என்று அவர் பந்திங் மருத்துவமனைக்கு மேற்கொண்ட அதிகாரப்பூர்வ வருகைக்கு பின்னர் மீடியா சிலாங்கூர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இதனிடையே, புதிய கட்டடத் தொகுதி கட்டுமானம் நடைபெறும் காலகட்டத்தில், பந்திங் மருத்துவமனையின் அவசர தேவைகளுக்கு, குறிப்பாக கூரை சேதம் காரணமாக மேல்சுவரில் நீர் ஒழுகும் பிரச்சனைக்கு, அமைச்சகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் போர்ஹான் கேட்டு கொண்டார்.
நோயாளிகள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு உற்சாகம் அளிப்பதோடு, அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் புகார்களை கேட்பதற்காக இந்த களப் பயணத்தை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், நோயாளிகள் பயன்பாட்டிற்காகப் பந்திங் மருத்துவமனை நிர்வாகத்திற்கு 10 சக்கர நாற்காலிகளையும் போர்ஹான் வழங்கினார்.


