கோல திரங்கானு, டிச 19: நேற்று சாபாங் திகாவில் உள்ள ஒரு நகை கடையில் போலி பணத்தைப் பயன்படுத்தி RM30,000 மதிப்புள்ள நகைகளை வாங்க முயன்ற ஆடவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
30 வயதுடைய சந்தேக நபர் பிற்பகல் 3.10 மணிக்கு கருப்பு நிற மூக்கு கண்ணாடி மற்றும் இளஞ்சிவப்பு முகக்கவரி அணிந்தபடி கடைக்கு தனியாக வந்ததாகக் கோல திரங்கானு மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏசிபி அஸ்லி முகமட் நோர் தெரிவித்தார்.
சந்தேக நபர் 36 வயதான விற்பனையாளரிடம் சில தங்க வளையல்களை எடுக்க சொல்லி, அவற்றை மனைவியிடம் காட்ட வேண்டும் என கூறி புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர், விற்பனையாளரிடம் நகைகளை வாங்கும் தனது விருப்பத்தைத் தெரிவித்ததாகவும் அஸ்லி முகமட் கூறினார்.
“விற்பனையாளர் சந்தேக நபரிடம் பணத்தை கேட்ட போது அந்நபர் ஒரு மஞ்சள் பிளாஸ்டிக் பையில் வைத்திருந்த பணத்தை எடுத்து கொடுத்தார்” என்று தெரிவிக்கப்பட்டது.
பணத்தின் விளிம்பு வெண்மையாக இருந்ததால் சந்தேகம் அடைந்த விற்பனையாளர், சந்தேக நபருடன் இழுபறி ஏற்படும் வரை பணத்தை ஆராய முயன்றதாக அஸ்லி கூறினார்.
நாடகம் அம்பலமாகிவிட்டதை உணர்ந்த சந்தேக நபர், கடையின் முன் இருந்த நீல நிற பெரோடுவா ஆக்சியா காரில் தப்பிச் சென்றதாக அவர் கூறினார்.
“வாகனத்தின் பதிவு எண் போலியானது என்பது சோதனையில் கண்டறியப்பட்டது. மேலும் விசாரணைக்காக சம்பந்தப்பட்ட வளாகத்திலிருந்தும் அருகிலுள்ள கடையிலிருந்தும் சிசிடிவி கேமராக் காட்சிகளைக் காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர்,” என்று அவர் கூறினார்.
கள்ளப் பணத்தைப் பயன்படுத்தும் குற்றவியல் சட்டப் பிரிவு 489Bஇன் கீழ் விசாரணை நடத்த வருகிறது.
-பெர்னாமா


