கோலாலம்பூர், டிச 18 - மின்சாரம் அல்லது கலப்பு வாகனங்களுக்கு மாறுவதை ஊக்குவிக்கும் வகையில், BUDI95 திட்டத்தின் கீழ் எரிபொருளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை,ரொக்க கழிவாக மாற்ற அரசாங்கம் திட்டமிடவில்லை என்று இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஸ்ரீ அமிர் ஹம்சா அசிசான் தெரிவித்தார்.
இந்நடவடிக்கை BUDI95திட்டத்தைச் செயல்படுத்துவதன் உண்மையான நோக்கத்தை மாற்றிவிடும் என்பதோடு, பெட்ரோல் இயந்திர வாகனங்களை நம்பியிருக்கும் பிரிவினருக்கு இலக்கிடப்பட்ட உதவித் தொகையின் செயல்திறனை பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டது.
மின்சார (EV) அல்லது கலப்பு வாகனங்களுக்கு மாறுவதற்கு ஓட்டுநர்களை ஊக்குவிப்பதில் 600 லிட்டர் ஒதுக்கீட்டின் செயல்திறன் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை அறிய விரும்பிய செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் ஆர். அருணாசலத்தின் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
BUDI95திட்டம் மின்சாரம் அல்லது கலப்பு வாகனங்களுக்கு மாறுவதை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டதல்ல என்றும் அமிர் ஹம்சா விளக்கினார்.
"இந்த திட்டத்தின் நோக்கம் மொத்த உதவித் தொகையிலிருந்து இலக்கிடப்பட்ட உதவித் தொகைக்கு மாறுவதாகும். மேலும், எரிபொருள் உதவி உண்மையிலேயே தேவைப்படுபவர்களுக்கும் தொடர்ந்து வழங்கப்படுவதை உறுதி செய்வதாகும்," என்றார் அவர்.


