ஷா ஆலம், டிச 18 - கடந்த டிசம்பர் 8ஆம் தேதி அன்று செபராங் ஜெயாவில் தனது மனைவியைக் கொலை செய்த குற்றச்சாட்டில் வேலையில்லாத ஆடவர் இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
குற்றம் சாட்டப்பட்ட 28 வயது கைருல் ரிசுவான் அப்துல்லா, குற்றச்சாட்டை மாஜிஸ்திரேட் நூருல் ரஸிதா முகமட் அகிட் முன் வாசித்த பிறகு,புரிந்துகொண்டதாக தலையசைத்தார் என சினார் ஹரியான் தெரிவித்தது.
கொலை வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருவதால் எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
குற்றச்சாட்டின்படி, சம்பவம் நடந்த அன்று மாலை சுமார் 4 மணியளவில் செபராங் ஜெயா, ஜாலான் துனாவில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் வான் கைருல் சஃபினா இஷாக் (44),என்பவரைக் கொலை செய்ததாக கைருல் ரிசுவான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தண்டனை சட்டப்பிரிவு 302 இன் கீழ் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 ஆண்டுகளுக்குக் குறையாத மற்றும் 40 ஆண்டுகளுக்கு மேல் போகாத சிறைத்தண்டனை மற்றும் குறைந்தது 12 பிரம்படிகள் விதிக்கப்படும்.
நீதிமன்றம் ஜாமீன் வழங்காமல், பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருப்பதால், வழக்கு மீண்டும் எதிர்வரும் 10 பிப்ரவரி அன்று விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, குற்றம் சாட்டப்பட்டவர் தனது மனைவியின் உடலை நான்கு நாட்கள் வைத்திருந்ததாகவும், பின்னர் டிசம்பர் 11ஆம் தேதி காவல்துறையில் புகார் அளிக்க முன்வந்ததாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.


