ஈப்போ, டிச 18- ஜாத்தி இடைநிலைப்பள்ளிக்கு பத்துகாஜா நாடாளுமன்ற மக்கள் சேவை மையத்தின் சார்பாக ஐயாயிரம் ரிங்கிட் நன்கொடை வழங்கப்பட்டதாகப் பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி.சிவக்குமார் கூறினார்.
முன்னதாகப், பள்ளிக்கு ஐயாயிரம் ரிங்கிட் நன்கொடை வழங்குவதாக வி.சிவக்குமார் உறுதியளித்திருந்தார். அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
நன்கொடையின் காசோலையை வழங்குவதற்காகப் பத்து காஜா நாடாளுமன்ற சேவை மையக் குழுவினருடன் தாம் நேரில் வருகை புரிந்ததைப் பள்ளி நிர்வாகம் மிகவும் மகிழ்ச்சியுடன் பாராட்டியது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த வருகை, பள்ளி சமூகத்திற்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதில் உள்ள நேர்மையையும் அர்ப்பணிப்பையும் பிரதிபலிப்பதாக அவர் கூறினார்.
ஜாத்தி இடைநிலைப்பள்ளி இப்பகுதியிலுள்ள பெரிய பள்ளிகளில் ஒன்றாகும். இங்கு அர்ப்பணிப்புள்ள மற்றும் கடமையுணர்வுள்ள ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கல்வி கற்பித்து வழிகாட்டி வருகின்றனர் என்று முன்னாள் மனிதவள அமைச்சருமான அவர் கருத்துரைத்தார்.


