ஷா ஆலம், டிச 18: சிலாங்கூரில் எந்தவொரு வணிக வளாகத்திலும் (ஷோப்பிங் மால்) செல்லப்பிராணிகளை உடன் கொண்டு வருபவர்களை அனுமதிக்க இயலாது என சுற்றுலா துறை ஆட்சிக்குழு உறுப்பினர் உறுதியாக கூறினார்.
பல்வேறு இனங்களின் சமூக உணர்வுகளுக்கு ஏற்ப தற்போதுள்ள வழிகாட்டுதல்கள் பொருந்துகிறதா என்பதை மாநில அரசு மீண்டும் ஆய்வு செய்யும் வரை, இந்தத் தடை தொடர்ந்து அமலில் இருக்கும் என இங் சுய் லிம் தெரிவித்தார்.
சிலாங்கூர் முன்னேற்றமடைந்த, சர்வதேச தரம் கொண்ட ஒரு மாநிலமாக இருப்பதால், குறிப்பிட்ட கொள்கைகளுடன் தொடர்புடைய அனைத்து நடவடிக்கைகளும் கவனமாகப் பரிசீலிக்கப்பட வேண்டும். சில நாடுகளைப் போல ‘விலங்கு நட்பு’ கொள்கைகளை பின்பற்ற முடியாது என்றார்.
“நமது பல இனங்களின் கலாச்சாரங்களைக் கருத்தில் கொண்டு, இந்த கொள்கை வணிக வளாகங்களில் பயன்படுத்தக்கூடியதா என்பதை முதலில் ஆராய வேண்டும். இது விவாதிக்கக்கூடிய விஷயம்தான், ஆனால், இதில் நன்மையும் தீமையும் இருப்பதால் இன்னும் தீர்வு இல்லை.“
“இதுவரை, எந்த வணிக வளாகத்திற்கும் செல்லப்பிராணிகளைக் கொண்டு வர அனுமதி வழங்கப்படவில்லை. சிலர் விதிகளை மீறினாலும், தடை தொடர்ந்து அமலில் இருக்கும். இதுகுறித்து அவ்வப்போது விவாதிக்கப்படும்,” என்றார் அவர்.
கடந்த சில நாட்களாகக், கோலாலம்பூரில் புதிதாக திறக்கப்பட்ட ஒரு வணிக வளாகத்திற்குள் செல்லப்பிராணிகளை கொண்டு வர அனுமதிப்பதாக சமூக ஊடகங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தலைநகரில் “செல்லப்பிராணி நட்பு” கொள்கையை அறிமுகப்படுத்திய முதல் வணிக வளாகமாக அது கூறப்படுகிறது.
எனினும், இந்த நடவடிக்கை இஸ்லாமியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


