புத்ராஜெயா, டிச 18 அடுத்த ஆண்டு முன்கூட்டிய பொதுத் தேர்தல்களை நடத்துவதற்கான எந்தவொரு சாத்தியமும் இல்லை என டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதும் மக்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் செலவு தொடர்பான பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதும் தான் இப்போது தனது கவனத்தில் உள்ளதாகப் பிரதமர் கூறினார்.
“தேர்தலுக்கு இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. நான் அதைப் பற்றி யோசிக்கவில்லை.சீர்திருத்தங்களை எவ்வாறு தொடர்ந்து செயல்படுத்துவது மற்றும் அதிக வாழ்க்கைச் செலவு தொடர்பாக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதில் கவனம் செலுத்தி வருகிறேன்,” என்றார்.
நேற்று புத்ராஜெயா ஸ்ரீ பெர்டானாவில் மூத்தப் பத்திரிக்கையாளர்களுடன் நடத்திய சந்திப்பின் போது பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் மலாக்கா மற்றும் ஜோகூர் மாநிலத் தேர்தல்களுடன் சேர்த்து, பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.


