கோலாலம்பூர், டிசம்பர் 18- இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறுவன் ஒருவனின் வலது தொடையில் உதைத்து எலும்பு முறிவு ஏற்படுத்திய குற்றத்திற்காகக், குழந்தை பராமரிப்பாளருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து காஜாங் செஷன்ஸ் நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 16) தீர்ப்பளித்தது.
இந்த தண்டனையை 47 வயதான நூர்டியானா லானோன்மிங்கிற்கு நீதிபதி மசுலியானா அப்துல் ரஷீட் விதித்தார்.
குற்றச்சாட்டுக்குள்ளானவர் செவ்வாய்க்கிழமை முதல் சிறைத்தண்டனையை அனுபவிக்கத் தொடங்க வேண்டும். மேலும், RM2,000 உத்தரவாதத் தொகையுடன் மூன்று ஆண்டுகள் நல்லொழுக்கப் பிணை ஒப்பந்தத்தில் கையெழுத்திட நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிறைத்தண்டனை முடிந்த பின் ஆறு மாதங்களுக்குள் 36 மணி நேர சமூக சேவையையும் நிறைவேற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
ஜூன் 20, 2023 அன்று காலை 10.51 மணிக்கு, காஜாங்கில் அமைந்துள்ள தாமான் தாமிங் எமாஸில் உள்ள வீடொன்றில், நான்கு வயது 11 மாதம் ஆன சிறுவனின் வலது தொடையில் உதைத்து துன்புறுத்தியதாக நூர்டியானா மீது குற்றம் சாட்டப்பட்டது.
குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 31(1)(a) இன் கீழ் இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக RM50,000 அபராதம் அல்லது 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்க வழிவகை செய்கிறது.


