உலு சிலாங்கூர், டிச 17 - புக்கிட் செந்தோசா, உலு சிலாங்கூர் பகுதியிலுள்ள ஜாலான் தெலிபோட் மற்றும் ஜாலான் செரோஜா சாலைகளில் செயல்பட்டு வந்த இரண்டு உணவகங்களில் எலிகளும் கரப்பான் பூச்சிகளும் காணப்பட்டதைத் தொடர்ந்து, அந்த இடங்களை 14 நாட்கள் மூடுவதற்கு உலு சிலாங்கூர் நகராண்மை கழகம் (எம்.பி.எச்.எஸ்) உத்தரவிட்டுள்ளது.
திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொது தூய்மை துறை (JPSPPA) நடத்திய ஆய்விற்குப் பின்னர் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக உலு சிலாங்கூர் நகராண்மை கழகம் தெரிவித்துள்ளது.
இந்த சோதனையில்,உரிமம் இன்றி செயல்படுதல், எலிகள் மற்றும் கரப்பான்பூச்சிகளின் கழிவுகள் காணப்படுதல், உணவு கையாளுபவர்கள் 'டைபாய்டு' தடுப்பூசியைப் போடாமல் இருத்தல் மற்றும் உணவு கையாளும் பயிற்சியை முடிக்காதது போன்ற விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.
மேலும், வெப்பநிலை கட்டுப்பாடு இல்லாத குளிர்சாதன பெட்டிகள், சுத்தமில்லாத சமையல் உபகரணங்கள் மற்றும் கழிப்பறைகள், நீர் தேங்கி வழுக்கும் சமையலறை தரை ஆகியவையும் கண்டறியப்பட்டன.
இந்த மீறல்களுக்காக, 2007ஆம் ஆண்டு உணவு நிலையங்கள் துணைச்சட்டம் மற்றும் உணவு கையாளுநர்கள் துணைச்சட்டத்தின் கீழ் மொத்தம் 19 அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் உலு சிலாங்கூர் நகராண்மை கழகம் தெரிவித்துள்ளது.
மூட உத்தரவிடப்பட்ட இரண்டு உணவகங்கள் முழுமையான தூய்மை பணிகளை மேற்கொண்டு, தொடர்ந்து நடத்தப்படும் சோதனையில் தேர்ச்சி பெற்ற பின்னரே மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படும் என உலு சிலாங்கூர் நகராண்மை கழகம் தெரிவித்தது.


