கோலாலம்பூர், டிச 17 - அடுத்தாண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கி தெற்கு மற்றும் கிழக்கு கடற்கரை பகுதிகளுக்குக் கூடுதல் ரயில் சேவையை கே.டி.எம்.பி. நிறுவனம் (KERETAPI TANAH MELAYU) வழங்கவிருக்கிறது.
கே.எல்.சென்ட்ரலிருந்து ஜோகூர் பாரு சென்ட்ரல் மற்றும் மீண்டும் கே.எல். சென்ட்ரலுக்கான இருவழி பயணத்தில் தெற்குப்பகுதிக்கு நான்கு மின்சார ரயில் சேவை இணைக்கப்பட்டுள்ளது.
அதன் மூலம் ஒரு நாளுக்கு வழங்கப்படும் மொத்த சேவையின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளதாகக் கே.டி.எம்.பி இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
பாடாங் பெசாரிலிருந்து சிகாமாட் மற்றும் பாடாங் பெசார் வழித்தடத்திற்கான இரண்டு ரயில் சேவை, ஜோகூர் பாரு சென்ட்ரலுக்கு நீட்டிக்கப்படும்.
அதோடு, அடுத்தாண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கி கிமாஸ்-கோலா லிப்பீஸ் வழித்தடத்திற்கு இரண்டு புதிய ரயில் சேவை சேர்க்கப்பட்டுள்ளதோடு, அது ஒரு நாளைக்கு ஆறு சேவையை வழங்கும்.


