புத்ராஜெயா, டிச 17- மறுசீரமைக்கப்பட்ட மடாணி அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று புத்ராஜெயாவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மனிதவள அமைச்சராக டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
இதுகுறித்து டத்தோஶ்ரீ ஆர்.ரமணன் கூறுகையில், இஸ்தானா நெகாராவில் சடங்குகள் முடிந்தவுடன், மனிதவள அமைச்சராக எனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நான் புத்ராஜெயாவில் உள்ள செத்தியா பெர்டானா வளாகத்திற்குச் சென்றேன்.
மனிதவள அமைச்சகத்தின் கீழ் உள்ள அனைத்து கொள்கைகளும் திட்டங்களும் மடாணி அரசாங்கத்தின் அபிலாஷைகளுக்கு ஏற்ப மக்களுக்கு உண்மையாகவே பலன் அளிப்பதை நான் உறுதிபூண்டுள்ளேன்.
நாளை நான் KESUMA-வின் உயர்மட்டத் தலைவர்களுடன் சந்திப்பு நடத்தவுள்ளேன். பிரதமரின் அறிவுறுத்தலின்படி, ஒவ்வொரு அமைச்சரவை உறுப்பினரும் ஒழுக்கத்துடனும் பணிவுடனும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்,
கொள்கை அமலாக்கம் விரைவாகவும், நேர்மையாகவும், தாமதமின்றி எந்தக் காரணமும் கூறப்படாமல் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். மலேசிய மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்த நான் சிறந்ததைச் செய்வேன் என்று அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.


