கோலாலம்பூர், டிச 17- நாட்டில் வேப் அல்லது மின்னியல் சிகரெட் பயன்பாட்டிற்கு முழுமையான தடை அடுத்த ஆண்டு இறுதிக்குள் அமலுக்கு வரும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்ளி அஹ்மட் கூறுகையில், இந்த அறிவிப்பு சரியான நேரத்துக்காக காத்திருக்கிறது என்றும், இது செயல்படுத்தப்படுமா இல்லையா என்ற கேள்வி இனி எழாது என்றும் தெரிவித்தார்.
“நாம் உண்மையில் தயாராக இருக்கிறோம், வேப்-ஐ நாம் தடை செய்வோமா இல்லையா என்பது இப்போது கேள்வி இல்லை, எப்போது தடை செய்வோம் என்பதே கேள்வி என்று நான் முன்பு கூறியிருந்தேன்.
“இதன் பொருள், வேப்-ஐ தடை செய்வதற்கான முடிவை நாங்கள் எடுத்துவிட்டோம். எனவே, அந்தத் தடையை நோக்கிச் சென்றால், எப்போது என்பதே பிரச்சினை.
“நான் மீண்டும் கூறுகிறேன், ஒருவேளை 2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அல்லது அதிகபட்சமாக 2026 ஆம் ஆண்டின் இறுதியிலோ இது அமலுக்கு வரலாம்,” என்று அவர் இன்று இங்குள்ள பெர்மை மருத்துவமனையில் அதிகாரப்பூர்வ பணி வருகைக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சு (KKM) இந்தத் தடையை 2026 ஆம் ஆண்டின் நடுப் பகுதியிலோ அல்லது அந்த ஆண்டின் இறுதிக்கு முன்போ அமல்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்த முடிவுக்கு வழிவகுத்த முக்கிய காரணிகளில் ஒன்று, தடை செய்யப்பட்ட மற்றும் செயற்கைப் பொருட்களுடன் கலக்கப் பட்ட வேப் திரவங்களின் பயன்பாடு குறித்த கவலையாகும்.
இது போதைப்பொருள் தூண்டப்பட்ட மனச்சிதைவு மற்றும் கடுமையான மனநலப் பிரச்சினைகள் உடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்டுள்ளது.


