ஷா ஆலாம், டிச 16- சிலாங்கூர் மாநிலத்தில் முழுமையான நில உரிமைப் பதிவுகளைக் கொண்டிராத பத்து தேசிய வகை தமிழ்ப் பள்ளிகளுக்கு (SJKT) நிலப் பத்திரம் மற்றும் தொடர்புடைய ஆவணங்களின் நகல்களை அந்தந்த பள்ளிகளின் பிரதிநிதிகள், தலைமையாசிரியர்கள், துணைத் தலைமையாசிரியர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிலாங்கூர் மாநில மனித வளம், வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு பாப்பா ராய்டு வீரமான் இந்த நகல் ஆவணங்களை எடுத்து வழங்கினார். சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்புச் செயலாக்க குழுவின் அயராத முயற்சியின் விளைவாக இது அமைகிறது.
இந்நிலையில், SJKT தெலோக் பாங்லிமா காராங், SJKT ஜென்ஜாரோம், SJKT சிம்பாங் மோரிப், SJKT சீஃபீல்ட் தோட்டம், சுபாங் ஜெயா, SJKT PJS 1, பெட்டாலிங் ஜெயா, SJKT காஜாங், SJKT பெர்சியாரான் ராஜா மூடா மூசா, பெலாபுஹான் கிள்ளான், SJKT Fes செர்டாங், SJKT துன் சம்பந்தன், சுபாங் ஜெயா மற்றும் SJKT பெஸ்தாரி ஜெயா ஆகிய பள்ளிகள் நில பத்திரம் மற்றும் அதன் தொடர்புடைய ஆவணங்களின் நகலைப் பெற்றுக்கொண்டனர்.
"இந்த முயற்சியை வெற்றிகரமாக செயல்படுத்த நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபட்ட சிலாங்கூர் மாநில கல்வித் துறை, நில மற்றும் சுரங்க அலுவலகம், பள்ளி நிர்வாகத்தினர், பள்ளி நிர்வாக வாரியம் (LPS), பெற்றோர் ஆசிரியர் சங்கம் (PIBG), அத்துடன் அனைத்து அதிகாரிகளுக்கும் தரப்பினருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்", என்று ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பா ராய்டு மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொண்டார்.
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு தேசிய வகை தமிழ்ப் பள்ளியும் சட்டபூர்வமான, ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான நிலப் பதிவுகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பதே தனது தெளிவான உறுதிப்பாடு என்று பந்திங் சட்டமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பத்து தமிழ்ப்பள்ளிகளுக்கான நிலப் பத்திரம் மற்றும் நில ஆவணங்களின் நகல்கள் ஒப்படைப்பு
17 டிசம்பர் 2025, 5:05 AM


