பெட்டாலிங் ஜெயா, டிச 17 - கம்போங் துங்கு தேசியப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை கம்போங் துங்கு மாநில சட்டமன்ற உறுப்பினர் லிம் யி வேய் ஏற்பாடு செய்திருந்தார்.
SS1 பகுதி குடியிருப்பாளர்களின் புகார்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் கருத்துகளின் அடிப்படையில், பள்ளிக்கு செல்லும் மற்றும் வீட்டிற்கு திரும்பும் போது அதிகமான மாணவர்கள் தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பது அடையாளம் காணப்பட்டது.
இந்த விவகாரம், பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பெற்றோர்-ஆசிரியர் சங்கம் (PIBG) உடன் நடைபெற்ற கலந்துரையாடல்களில் முன்வைக்கப்பட்ட பின்னர், தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக லிம் யி வேய் தெரிவித்தார்.
“மாணவர்களின் பாதுகாப்பு குறித்து, குறிப்பாக தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பது தொடர்பாக, பள்ளி நிர்வாகமும் குடியிருப்பாளர்களும் கவலை கொண்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, சாலை போக்குவரத்து துறை (ஜேபிஜே) உடன் இணைந்து, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்த ஒரு மூலோபாய ஒத்துழைப்பு ஏற்படுத்தப்பட்டது.
இந்த முயற்சியின் கீழ், மாணவர்களுக்கு 50 தலைக்கவசங்களை ஜேபிஜே வழங்கியது. அதே நேரத்தில், கம்போங் துங்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சியின் இளைஞர் இயக்கம் பிரிவு 20இன் பிரதிநிதி லெனார்ட்ஸ் ஜோன் அவர்களுடன் இணைந்து மேலும் 50 தலைக்கவசங்களை வழங்கியது.
அதுமட்டுமில்லாமல், மாணவர்களுக்கும் பள்ளி பணியாளர்களுக்கும் சாலை பாதுகாப்பு குறித்த கருத்தரங்கை ஜேபிஜே ஏற்பாடு செய்திருந்தது.
உள்ளூர் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி, சமூக நலனுக்காக முன்நோக்கிய மற்றும் சிறப்பான அணுகுமுறையை மேற்கொள்ள இருப்பதாக லிம் யி வேய் தெரிவித்தார்.


