ஷா ஆலம், டிச 17: அடுத்த ஆண்டு முதல் இலவச இணைய வெளிநாட்டு மொழி வகுப்புகளை நடத்த மாநில அரசு மேற்கொள்ளும் முயற்சி, மனித வள வளர்ச்சியை வலுப்படுத்துவதோடு, சிலாங்கூரின் பல்வேறு இனங்களை உள்ளடக்கிய சமூகத்தில் இன ஒற்றுமையை மேம்படுத்தும் ஒரு மூலோபாய நடவடிக்கையாகும்.
மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்த இந்த திட்டம், சிலாங்கூரின் மக்கள்தொகை அமைப்புக்கும், இன்றைய உலகமயமான சூழலில் பல மொழிகளை கற்றறிவதன் அவசியத்திற்கும் ஒத்ததாக இருப்பதாக மாநிலத்தின் கிராமப்புற வளர்ச்சி, ஒற்றுமை மற்றும் நுகர்வோர் விவகாரங்களுக்கான நிர்வாகக் குழு உறுப்பினர் டத்தோக் ரிசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.
மண்டரின் மற்றும் அரபிக் போன்ற வெளிநாட்டு மொழிகளை கற்றறிதல், தொடர்பால், வணிகம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் நாளுக்கு நாள் முக்கியத்துவம் பெறுகின்றது. மேலும், இது மாநில மக்களுக்கு நீண்டகால நன்மைகளை வழங்கும் என்றும் அவர் கூறினார்.
“இந்த இலவச இணைய வெளிநாட்டு மொழி வகுப்பு திட்டம் மிகவும் சிறந்த நடவடிக்கையாகும். இது சமூக மக்களை குறிப்பாக தேசிய வளர்ச்சியின் முக்கிய இயக்க சக்திகளில் ஒன்றாக இருக்கும் சிலாங்கூரின் சூழலில் பல்வேறு மொழிகளில் திறமையுடன் உருவாக்க உதவுகிறது, ,” என்று அவர் பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) அமிருடின் வெளியிட்ட அறிவிப்பை குறித்து ரிசாம் கருத்து தெரிவித்தார். அந்த அறிவிப்பில், பல்மொழி திறன்களை வலுப்படுத்தவும் மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கவும், அடுத்த ஆண்டு முதல் இலவச இணைய வெளிநாட்டு மொழி வகுப்புகள் நடத்தப்படும் என்று மாநில அரசு தெரிவித்திருந்தது.
மொழித் திறன் மீது மாநில அரசுக்கு உள்ள நம்பிக்கையை இந்த அணுகுமுறை வெளிப்படுத்துகிறது என்றும், அது மலேசியா உலகளாவிய அளவில் முன்னேற உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.
அரபி, மண்டரின், தமிழ், பிரெஞ்சு, ஜெர்மன் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் இலவச வகுப்புகளை வழங்குவதன் மூலம், மலாய் மற்றும் ஆங்கிலம் உட்பட குறைந்தது மூன்று மொழிகளில் சிலாங்கூர் மக்கள் திறமை பெற வேண்டும் என்பதே மாநில அரசின் இலக்காகும் என மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.


