கோலாலம்பூர், 16 டிசம்பர்- இன்று முதல் வியாழக்கிழமை வரை திரங்கானு, பகாங் மற்றும் ஜோகூர் மாநிலங்களின் சில பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று மாலை 4.45 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை எச்சரிக்கை திரங்கானு மாநிலத்தில் டுங்குன் மற்றும் கெமாமான் பகுதிகளை உள்ளடக்கியுள்ளது என்று மலேசிய வானிலை துறையின் தலைமை இயக்குநர் டாக்டர் முகமது ஹிஷாம் முகமது அனிப் தெரிவித்தார்.
இதனுடன், அதே காலப்பகுதியில் எச்சரிக்கை நிலை கொண்ட தொடர்ச்சியான மழை கிளந்தான் மாநிலம் முழுவதும், மேலும் திரங்கானு மாநிலத்தில் பெசுட், செதியு, கோலா நெருஸ், கோல திரங்கானு மற்றும் மாராங் பகுதிகளிலும் பெய்யும் என முன்னறி விக்கப்பட்டுள்ளது.
அதே எச்சரிக்கை நிலை பகாங் மாநிலத்தின் லிப்பிஸ், ரவூப், பெந்தோங், தெமர்லோ மற்றும் பேரா பகுதிகளையும், ஜோகூர் மாநிலத்தில் தங்காக், பத்து பஹாட், பொந்தியான்,ஜோகூர் பாரு பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது.
பொதுமக்கள் சமீபத்திய வானிலை தகவல்களை வானிலை துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ சமூக ஊடக வழிகளின் மூலம் பெறலாம். கூடுதல் தகவல்களுக்கு தொலைபேசி சேவையையும் தொடர்புகொள்ளலாம்.


