கோம்பாக், நவ 16 - தற்போது எஸ்.பி.எம் முடித்த மாணவர்களில் மொத்தம் 53.9 விழுக்காட்டினர் மேற்கல்விவைத் தொடர திவேட் பயிற்சி திட்டத்தை தேர்வு செய்துள்ளனர்.
இதன்வழி, 13-வது மலேசியத் திட்டத்தின் இறுதிக்குள் 70 விழுக்காடு இலக்கை அடைய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, காரணம் இலக்கை அடைவதற்கு இன்னும் 17 விழுக்காடு மட்டுமே தேவைப்படுகிறது.
மாணவர்களின் இந்த போக்கு நாட்டின் கல்வி சூழலில் நேர்மறையான மாற்றங்களைக் காட்டுவதாகவும் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு விகிதங்கள் அதிகரிப்பதாலும், குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு சிறந்த சம்பள வாய்ப்புகளாலும் இந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
"நாடு முழுவதும் 1,398 டிவெட் கழகங்களில் மொத்தம் 439,000 மாணவர்கள் இருக்கும் வேளையில், கல்வி சூழலை மாற்றுவதற்கான இலக்கை நாடு அடைவதற்கான போக்கை இது காட்டுகிறது," என்றார் அவர்
உயர் தாக்கத்தை ஏற்படுத்தும் தொழில்துறைகளின் தேவைகளை ஆதரிப்பதில், குறிப்பாக மின்னியல் உபரிப்பாகங்கள், ஆற்றல் சேமிப்பு தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்ப பராமரிப்பு துறைகளில் டிவெட் கழகங்கள் தொடர்ந்து முக்கியப் பங்கு வகிப்பதாக டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் தெரிவித்தார்.
-- பெர்னாமா


