கோலாலம்பூர், டிசம்பர் 16 – அடுத்தாண்டு தொடக்கத்தில் ஏற்படக்கூடிய பெரும் வெள்ளத்தை எதிர்கொள்ள தொடர்பு அமைச்சு எப்போதும் உயர் தயார்நிலையில் உள்ளது. இதன் மூலம் தகவல் தொடர்பு மற்றும் இணைய சேவை தடங்கலின்றி செயல்படும் என்று சம்பந்தப்பட்ட அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் தகவல் தொடர்பு வலையமைப்புகள் மற்றும் இணைய இணைப்புகள் உடனடியாக மீட்டெடுக்கப்படுவதையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கப்படுவதையும் அமைச்சு முக்கியமாக உறுதி செய்யும் என்று அவர் கூறினார்.
இந்தாண்டு தொடக்கத்தில் கிளந்தானின் சில மாவட்டங்களைத் தாக்கிய பெரும் வெள்ள அனுபவம், குறிப்பாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் தகவல் தொடர்பு கோபுர உள்கட்டமைப்பு வழங்குநர்களுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒரு முக்கியமான பாடமாக அமைந்தது என்று ஃபஹ்மி குறிப்பிட்டார்.
"இந்தாண்டு தொடக்கத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தின் போது, பல தகவல் தொடர்பு கோபுரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன, நிலத்தடியில் புதைக்கப்பட்ட கேபிள்களும் வெள்ளத்தால் சேதமடைந்தன. எனவே, குழுக்கள் உயர் தயார்நிலையில் இருக்குமாறு நான் கேட்டுக்கொண்டேன்," என்று அவர் கூறினார்.


