கோலாலம்பூர், டிச 16- சபாவிற்கான சிறப்பு மானியப் பேச்சுவார்த்தைகள் டிசம்பர் 19ஆம் தேதி மீண்டும் தொடரும் என்று இரண்டாம் நிதியமைச்சர் அமீர் ஹம்சா அசிசான் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தை செயல்முறை சீராக நடைபெறுவதை உறுதிசெய்ய, சபா மாநில அரசும் கூட்டரசு அரசும் முற்போக்கான கலந்துரையாடல்களை மேற்கொள்ள உறுதிப்பாடு தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.
"கூட்டரசு அரசு, சபா மாநில அரசுடன் 2025 நவம்பர் 17ஆம் தேதி பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்ததுடன், கூட்டரசு அரசுக்கும் சபா மாநில அரசுக்கும் இடையில் அதிகாரப்பூர்வ சிறப்பு மானியப் பேச்சுவார்த்தைக் குழு ஒன்றையும் அமைத்தது.
"அதுமட்டுமின்றி, எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படும்போது வழிகாட்டியாகப் பயன்படுத்தப்படும் மேற்கோள் விதிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது," என்று பெர்னாமா செய்தி நிறுவனத்திடம், 2026ஆம் ஆண்டுக்கான விநியோக (பட்ஜெட்) மசோதா மீதான விவாத அமர்வை செனட் சபையில் முடித்து வைக்கும்போது அவர் கூறினார்.
மலேசிய ஒப்பந்தம் 1963 அமலாக்கச் செயல் மன்றத்தின் (MTPMA63) வாயிலாக, சபாவிற்கான சிறப்பு மானியத் தொகையை அதிகரிப்பது உட்பட சிறந்த சிறப்பு மானிய விகிதத்தை பேச்சுவார்த்தை நடத்த கூட்டரசு அரசு உறுதிபூண்டுள்ளது என்றும் அமீர் ஹம்சா தெரிவித்தார்.


