ஷா ஆலம், டிச 16 — வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் பிரபலமான பிராண்ட் சமையல் பாத்திரத் தொகுப்பை வாங்க வேண்டும் என ஒரு பெண்ணின் ஆசை, மோசடியில் முடிந்தது. இந்த மோசடியில் அவர் RM155,788 இழந்துள்ளார்.
இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 வயதான அந்த பெண், கடந்த செப்டம்பர் மாதத்தில், இன்ஸ்டாகிராம் செயலியில் உள்ள my.lovelykitchen.uk என்ற கணக்கின் மூலம் வெளியிடப்பட்ட சமையல் பாத்திர விளம்பரத்தால் ஈர்க்கப்பட்டார் என பிரிக்பீல்ட்ஸ் மாவட்டக் காவல் தலைவர், உதவி ஆணையர் ஹூ சாங் ஹூக் கூறினார்.
தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றும் அவர், அந்த சமையல் பாத்திர தொகுப்பை வாங்குவதற்காக சந்தேக நபர் வழங்கிய வங்கி கணக்கிற்கு முன்பணம் செலுத்தியதாக ஹூ சாங் தெரிவித்தார்.
“முன்பணம் செலுத்திய பின்னர், சுங்கத் துறையின் அனுமதி, உத்தரவாதத் தொகை மற்றும் நிர்வாகக் கட்டணங்கள் என்ற பெயரில் மேலும் பல கட்டணங்களை செலுத்துமாறு பாதிக்கப்பட்டவரிடம் கேட்கப்பட்டது.
“இந்த கோரிக்கைகள், விற்பனையாளரின் பிரதிநிதி, சுங்க அதிகாரி மற்றும் மத்திய வங்கி அதிகாரி என நடித்து பேசிய நபர்களால் முன்வைக்கப்பட்டன,” என்று ஹூ சாங் தெரிவித்தார்
அதனைத் தொடர்ந்து, சந்தேக நபர்களின் அறிவுறுத்தலின் பேரில், பாதிக்கப்பட்டவர் 18 வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு பல்வேறு பணமாற்று பரிவர்த்தனைகளை மேற்கொண்டதாகவும் அவர் கூறினார்.
எனினும், இதுவரை அவர் ஆர்டர் செய்த பொருட்களைப் பெறவில்லை. சந்தேக நபர்கள் தொடர்ந்து பல்வேறு காரணங்களைக் கூறிய பின்னரே, தன்னை ஏமாற்றியதாக அந்த பெண் உணர்ந்துள்ளார்.
“மொத்தமாக பாதிக்கப்பட்டவர் RM155,788 இழப்பை சந்தித்துள்ளார். இதுவரை சந்தேக நபர்கள் அடையாளம் காணப்படவில்லை. இந்த வழக்கு குற்றச் சட்டப் பிரிவு 420இன் கீழ் விசாரணை செய்யப்படுகிறது,” என்று ஹூ சாங் கூறினார்.
RM14.55 பில்லியன் மதிப்பிலான வரி கூடுதலாக வரி செலுத்தியவர்களுக்கு திருப்பி செலுத்தப்பட்டுள்ளது - மேலவையில் தகவல்
பெட்டாலிங் ஜெயா, டிச 16 — கடந்த நவம்பர் 30 நிலவரப்படி, RM14.55 பில்லியன் மதிப்பிலான வரியை கூடுதலாக வரி செலுத்தியவர்களுக்கு உள்நாட்டு வருமான வாரியம் (LHDN) திருப்பி செலுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கை 3.47 மில்லியன் வழக்குகளை உள்ளடக்கியது என துணை நிதியமைச்சர் லிம் ஹுய் யிங் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு செலுத்தப்பட்ட RM12.39 பில்லியன் வரியைக் காட்டிலும் இந்த ஆண்டு அதன் தொகை 17.5% உயர்வைக் காட்டுவதாக அவர் கூறினார்.
இதுவரை 3.3 மில்லியன் பேருக்கு பணம் முழுமையாக திருப்பி செலுத்தப்பட்டு விட்ட நிலையில் அதற்கான தொகை RM13 பில்லியனை கடந்துள்ளதாக அவர் மேலவையில் 2025 நிதி மசோதா குறித்த விவாதத்தை நிறைவு செய்யும் போது கூறினார்.
மேலும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ளவர்களுக்கு வரிப் பணத்தை திருப்பிச் செலுத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. கணக்குத் தணிக்கைக்கு முன்பே அவற்றைத் திருப்பிச் செலுத்தும் நடைமுறை பின்பற்றப்பட்டதாக துணையமைச்சர் மேலவையில் தெரிவித்தார்.


