பத்து கேவ்ஸ் ‘இந்தியன் செட்டில்மெண்ட்’ மேம்பாட்டிற்காக சிலாங்கூர் அரசு RM 10 மில்லியன் ஒதுக்கீடு

15 டிசம்பர் 2025, 1:33 PM
பத்து கேவ்ஸ் ‘இந்தியன் செட்டில்மெண்ட்’ மேம்பாட்டிற்காக சிலாங்கூர் அரசு RM 10 மில்லியன் ஒதுக்கீடு

கோம்பாக், டிச 15-பத்து கேவ்ஸ், ‘இந்தியன் செட்டெல்மெண்ட்’ (Kampung Indian Settlement) கிராமத்தின் மறுசீரமைப்புப் பணிகளுக்காக சிலாங்கூர் மாநில அரசு 10 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது. பொதுமக்களுக்கு வசதி மிக்க குடியிருப்புப் பகுதியையும், முறையான அடிப்படை உள் கட்டமைப்புகளையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் செயல் படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தைச் செலாயாங் நகராண்மைக் கழகம் (MPS) மேற்கொள்ள இருப்பதாகவும், அடுத்த ஆண்டு தைப்பூச திருவிழாவிற்கு பின்னர் இப்பணிகள் தொடங்கும் என்றும் டத்தோ மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். ஓராண்டு காலத்திற்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ள இந்த மேம்பாட்டுப் பணிகளில், 2.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை விரிவாக்கம், தெருவிளக்குகள் பொருத்துதல் மற்றும் அப்பகுதியில் ஏற்படும் வெள்ளப் பிரச்சனையைத் தீர்க்க புதிய வடிகால் அமைப்புகள் கட்டுதல் ஆகியவை அடங்கும்.

நீண்ட காலமாகத் தாமதப்படுத்தப்பட்ட இத்திட்டம், தற்போது பொது மக்களுடனான இயக்கத்திற்குப் பிறகு செயல்படுத்தப் படவுள்ளது. சாலைப் பணிகளுக்கு வழிவிட வேண்டியுள்ள 44 குடும்பங்கள் உட்பட, பெரும்பான்மையான மக்கள் இத் திட்டத்திற்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாக அமிருடின் கூறினார்.

மேலும், ஒவ்வொரு குடும்பமும் சட்டப்பூர்வமாக தங்கள் நிலத்தில் குடியேறுவதை உறுதி செய்யும் வகையில், 2009-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள நில உரிமைப் பிரச்சினைகளைச் சரி செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

1950 மற்றும் 1960-களின் நில வரை படங்களின்படி சாலைக்கான ஒதுக்குப்புற நிலங்களை உறுதிப்படுத்துவதே முக்கிய சவாலாக இருந்ததாகவும், தற்போது அவை சரிபார்க்கப் பட்டு விட்டதாகவும் அவர் கூறினார். முன்னதாக, 1960-கள் முதல் நீடித்து வந்த 77 குடியிருப்பாளர்களின் நில உரிமைப் பிரச்சினை 2021-இல் தீர்வு காணப்பட்டு, அவர்களுக்கு நிலம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.