ஷா ஆலம், 15 டிசம்பர்- பகுதி நேர வேலை என்ற பெயரில் மோசடிக்கு இரையானதால், உதவி கட்டிடக் கலைஞராக பணியாற்றும் இளம் பெண் ஒருவர் RM67,789 இழந்துள்ளார் என கோல திரங்கானு மாவட்ட காவல் தலைவர், உதவி ஆணையர் அஸ்லி முகமது நூர் தெரிவித்தார்.
20 வயதுடைய அந்த பெண், கடந்த சில நாட்களில் தனது சேமிப்பு தொகை காணாமல் போனதை அறிந்த பின்னர், நேற்று இரவு 9.30 மணியளவில் கோல திரங்கானு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்று அவர் கூறினார். சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்ட பகுதி நேர வேலை விளம்பர இணைப்பை அந்த பெண் அழுத்திய பின்னர், அவர் ஒரு உடனடி செய்தி செயலிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பின்னர், தனிப்பட்ட தகவல்களை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டதுடன், மற்றொரு செய்தி பரிமாற்ற செயலி மூலம் வேறு நபருடன் தொடர்பு கொள்ளச் சொல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, ஒரு ஆடை நிறுவனத்தின் இணையதளத்தில் பொருட்கள் வாங்குவது தொடர்பான பணிகளை செய்யுமாறு பாதிக்கப்பட்டவர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
மொத்தம் 16 பணிகளை செய்திருந்தாலும், முதல் மற்றும் இரண்டாவது பணிகளில் மட்டுமே 50 ரிங்கிட் மற்றும் 280 ரிங்கிட் என குறைந்தளவு லாபம் கிடைத்துள்ளது. அதன் பின்னர் மேற்கொண்ட 11 பணிகளுக்காக, டிசம்பர் 12 முதல் 14 வரை, ஐந்து வேறு வேறு வங்கி கணக்குகளுக்கு மொத்தம் 67,789 ரிங்கிட் செலுத்திய பின்னரே, தான் மோசடி செய்யப்பட்டுள்ளதாக அவர் உணர்ந்துள்ளார்.
இணைய வழி பகுதி நேர வேலை என்ற பெயரில் வரும் சலுகைகள் குறித்து பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், பணம் செலுத்துமாறு அல்லது தனிப்பட்ட தகவல்களை பகிருமாறு கேட்கப்படும் போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அஸ்லி அறிவுறுத்தினார்.


