ஷா ஆலம், டிச 15: இன்று சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் சுற்றியுள்ள சில பகுதிகளில் மின்சார விநியோகத் தடை ஏற்படும்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார விநியோகத்தை மீட்டெடுக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) நிறுவனத்தின் தொடர்பாளர் தெரிவித்தார்.
“எங்கள் தொழில்நுட்பக் குழுக்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் மின்சார விநியோகத்தை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. பொதுமக்களின் பொறுமையைப் பெரிதும் எதிர்பார்க்கிறோம். ஏற்பட்டுள்ள அசௌகரியத்திற்கு மன்னிப்புக் கோருகிறோம்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
பெட்டாலிங் ஜெயா சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட மின்சார தடை, நண்பகல் 12.06 மணிக்கு முழுமையாக சரிசெய்யப்பட்டதாக TNB தெரிவித்தது.
இந்த மின்சார தடை காலை 11.28 மணியளவில் ஏற்பட்டதுடன், தொழில்நுட்பக் குழுக்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அனுப்பப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, எந்த நேரத்திலும் மின்சார விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பலாம் என்பதால், மின்சாதனங்களைப் பயன்படுத்தும் போது பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என TNB அறிவுறுத்தியுள்ளது.
மேலும், மின்சார விநியோகத்தில் ஏதேனும் தடை ஏற்பட்டால், உடனடி நடவடிக்கையாக TNBஇன் அதிகாரப்பூர்வத் தளங்களில் புகார் அளிக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


