ஷா ஆலம், டிச 15: பந்திங் தொகுதியில் பல உள்கட்டமைப்பு திட்டங்கள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் கம்போங் பாத்திமா பொது மண்டபக் கட்டுமானம் மற்றும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் வெள்ளப் பிரச்சனையைத் தீர்க்கும் நோக்கில், சுங்கை சீடு ஆற்றுக்கான கால்வாய்கள் மேம்பாடு மற்றும் ஆற்றைப் அகலப்படுத்தும் பணிகளும் அடங்கும்.
சமூக சேவை மையக் குழுவுடன் மேற்கொண்ட கள ஆய்வில், இந்த திட்டங்களின் தற்போதைய முன்னேற்ற நிலை பரிசீலிக்கப்பட்டதாகவும், அவை திட்டமிட்டபடி செயல்பட்டு மக்களுக்கு உடனடி பயன் அளிப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கம் எனவும் பந்திங் மாநில சட்டமன்ற உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கூறினார்.
“பந்திங் தொகுதியின் இந்திய சமூகத் தலைவராக செயல்படும் சகோதரர் சாமிதுரை அவர்களுக்கு எனது வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். சமூகத்தின் பங்கை வலுப்படுத்தி, மக்களின் தேவைகளுக்கு உரிய கவனம் வழங்கும் அவரது முயற்சிகள், சிலாங்கூர் முழுவதும் உள்ள இந்திய சமூகத் தலைவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும்,” என்று அவர் முகநூலில் தெரிவித்தார்.
மேலும், உள்ளூர் அரசாங்க மேம்பாட்டு அமைச்சகம் (KPKT) வழியாகப் பெறப்பட்டு, மாவட்ட அலுவலகத்தின் நிர்வாகத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீடு, தேவையான உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள முக்கிய தூண்டுகோலாக அமைந்துள்ளதாகவும், இதன் மூலம் குடியிருப்பாளர்களின் வசதிகளும் பாதுகாப்பும் மேம்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த தொடர்ச்சியான முயற்சிகள், உள்ளூர் மக்களுக்கு பெரும் நன்மைகளை அளித்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் எனவும் பாப்பாராய்டு நம்பிக்கை தெரிவித்தார்.



