ஷா ஆலம், டிச 15: சமயம் சம்பந்தப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்தவும், சமயத் தள உட்கட்டமைப்புகளை மேம்படுத்தவும், இந்த ஆண்டில் சிலாங்கூர் மாநிலம் முழுவதும் உள்ள தேவாலயங்கள் மற்றும் தேவாலய சங்கங்களுக்கு மாநில அரசு RM513,500 நிதி உதவியை வழங்கியுள்ளது.
இந்த ஒதுக்கீடு RM442,500 தேவாலயங்களுக்கு வழங்கப்பட்டதுடன், RM71,000 தேவாலய சங்கங்களுக்கு வழங்கப்பட்டதாக மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
“யாரும் புறக்கணிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய மாநில அரசு தொடர்ந்து உறுதியாக செயல்படுகிறது. இந்த ஆண்டில் மட்டும், சிலாங்கூரில் உள்ள தேவாலயங்களுக்கு RM442,500 வழங்கப்பட்டுள்ளதுடன், தேவாலய சங்கங்களுக்கு RM71,000 ஒதுக்கப்பட்டுள்ளது.
“அடுத்த ஆண்டில், இஸ்லாம் அல்லாத ஐந்து முக்கிய சமயங்களுக்கு வழங்கப்படும் ஒதுக்கீடு RM6 மில்லியனிலிருந்து RM8 மில்லியனாக உயர்த்தப்பட்டுஉள்ளதாக,” அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.
பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒன் உத்தாமா ஷாப்பிங் மாலில் மாநில அளவில் கிறிஸ்துமஸ் தினக் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் பல்வேறு இனங்களையும் பின்னணியையும் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டனர்.
பல இன, மத அடையாளமே சிலாங்கூரின் வலிமை என்றும், அதுவே ஒற்றுமை, பரஸ்பர புரிதல் மற்றும் “கித்தா சிலாங்கூர், மாஜு பெர்சாமா” என்ற கருப்பொருளில் அடிப்படையாக அமைந்துள்ளது என்றும் அமிருடின் வலியுறுத்தினார்.
மொழி, பண்பாடு மற்றும் நம்பிக்கைகளில் உள்ள வேறுபாடுகள், சமூகத்தில் பிரிவுகளை உருவாக்குவதற்கல்ல; மாறாக, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள உதவும் பாலமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
“இனவாதம் மற்றும் வெறுப்பை தூண்டும் தீவிரவாதத்திற்கு சிலாங்கூரில் இடமில்லை,” என அவர் தெரிவித்தார்.
மேலும், சிலாங்கூரில் உள்ள அனைத்து கிறிஸ்தவ மதத்தினருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்ததுடன், 2026ஆம் ஆண்டு அனைவருக்கும் அதிக நன்மைகளையும் புதிய நம்பிக்கைகளையும் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வாழ்த்தினார்.


