நியூ சவுத் வேல்ஸ், டிசம்பர் 15- ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் நேற்று மாலை மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. இதில் இரண்டு போலீஸ் அதிகாரிகள், பெண்கள், குழந்தைகள் உள்பட பலர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதல் பல மாதங்களாக திட்டமிடப்பட்டதாகவும், குழந்தைகள் விளையாட்டு மைதானத்துக்கு அருகிலுள்ள போண்டி கடற்கரை பூங்காவில் நடந்த யூத மத பண்டிகையான ஹனுக்கா நிகழ்வை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
தாக்குதல் நடத்திய ஒருவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார், மற்றொருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று வருகிறார். பாலத்தின் கீழ் ஒரு வெடிகுண்டு இருப்பதாக தகவல் வந்ததால், அந்தப் பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இரண்டு நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து பேசிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், “ இது அதிர்ச்சியூட்டும், துயரமளிக்கும் நிகழ்வு. பாதிக்கப்பட்டவர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளது. இதுகுறித்து காவல் ஆணையர், நியூ சவுத் வேல்ஸ் பிரீமியருடன் பேசினேன். மேலும் பொதுமக்கள் காவல்துறை வழிகாட்டுதலைப் பின்பற்றவேண்டும்” என்றார்


