குளுவாங், டிச 15: ‘போன் ஸ்காம்’ மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்ட நிறுவனத்தின் முன்னாள் மேலாளர் ஒருவர் RM241,000 இழந்தார்.
கடந்த நவம்பர் 6ஆம் தேதி தன்னை தேசிய மோசடி மையத்தின் (NSRC) அதிகாரி என அறிமுகப்படுத்திய, அடையாளம் தெரியாத தொலைபேசி எண்ணிலிருந்து அழைப்பு வந்ததாக 47 வயதான பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார் என குளுவாங் மாவட்டக் காவல் துறை தலைவர் ஏசிபி பஹ்ரின் முகமட் நோ கூறினார்.
பாதிக்கப்பட்ட நபரின் தொலைபேசி எண் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டு, அதன் பின்னர் அந்த அழைப்பு, திரங்கானு மாநிலக் காவல் தலைமையகத்தின் (IPK Terengganu) அதிகாரி என ஒருவரிடம் இணைக்கப்பட்டது.
“பாதிக்கப்பட்ட நபரின் பெயரில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், தன்னிடம் உள்ள அனைத்து பணத்தையும் கொடுக்கப்பட்ட கணக்குகளுக்கு மாற்றுமாறு உத்தரவிடப்பட்டதாகவும் கூறப்பட்டது.
“நவம்பர் 18 முதல் 27 வரை, பாதிக்கப்பட்ட நபர் ஏழு வெவ்வேறு கணக்குகளுக்கு பணத்தை மாற்றியுள்ளார். பின்னர் தன்னை ஏமாற்றியுள்ளனர் என்பதை உணர்ந்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்,” என பஹ்ரின் முகமட் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார்.
இந்த வழக்கு குற்றச் சட்டத்தின் பிரிவு 420ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.


