ஷா ஆலம், டிசம்பர் 12 —சிரம்பான் மாவட்டத்தில் உள்ள பண்டார் செண்டாயான் பகுதியில், திங்கட்கிழமை மாலை மயக்க நிலையில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட ஒரு வயது பெண் குழந்தை உயிரிழந்தது என்று போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
குழந்தை மாலை 5.50 மணிக்கு மருத்துவமனைக்கு கொண்டு வரப் பட்டதுடன், அங்கு பணியாற்றியிருந்த மருத்துவர் உடனடியாக இதய, நுரையீரல் மீட்பு நடவடிக்கை மேற் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் குறுகிய நேரத்திற்குள் குழந்தை இறந்ததாக சிரம்பான் மாவட்ட காவல்துறைத் தலைமை உதவி ஆணையர் அசாஹர் அப்துல் ரஹீம் கூறினார்.
ஆரம்ப விசாரணையில், குழந்தை 32 வயது பெண் பராமரிப்பாளரின் காவலில் இருந்தபோது திடீரென பலவீனமடைந்ததாக தெரியவந்துள்ளது. “ரெம்பாவ் மருத்துவமனையில் நடத்தப்பட்ட உடற்கூறு பரிசோதனையில், குழந்தையின் வயிற்றுப் பகுதியில் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது,” என்று அவர் தெரிவித்தார். இதை குறித்து பராமரிப்பாளர் கைது செய்யப்பட்டு, பின்னர் போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கு குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் சம்பந்தப்பட்ட பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு, மேலதிக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது


